சட்டசபையில் இருந்து கருணாஸ் எம்.எல்.ஏ திடீர் வெளிநடப்பு

  • IndiaGlitz, [Tuesday,June 20 2017]

பிரபல நகைச்சுவை நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் அதிமுகவின் சசிகலா அணிக்கு முழு ஆதரவு தந்து கொண்டிருந்த நிலையில் இன்று முதலமைச்சரின் பதில் ஒன்றுக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சபையில் இருந்து வெளியேறினார்.

மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்த கால்நடை சந்தை கட்டுப்பாட்டு சட்டத்தை தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவை, கேரளா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தமிழகத்தில் பசுவதை தடுப்பு சட்டம் 40 ஆண்டுகளாக அமலில் உள்ளதாகவும் இருப்பினும் கால்நடை சந்தை கட்டுப்பாடு விவகாரத்தில் பெரும்பான்மையான மக்களின் விருப்பப்படி தமிழக அரசின் நிலைப்பாடு இருக்கும் என்றும், கூறினார்.

முதல்வரின் இந்த பதிலில் அதிருப்தி அடைந்த அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் 'கால்நடை சந்தை கட்டுப்பாடு சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது என்றும் இதைத்தான் உண்ண வேண்டும் எனக் கூற யாருக்கும் அதிகாரமில்லை என்றும் சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கருணாஸ் எம்எல்ஏ பேட்டி அளித்தார்.