கடந்த ஆண்டு இதே தலைவர் பிறந்த நாளில்.. கார்த்திக் சுப்புராஜின் பதிவு..!

  • IndiaGlitz, [Tuesday,December 12 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல அரசியல்வாதிகளும், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தை இயக்கிய ரஜினியின் தீவிர ரசிகர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளத்தில் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைதளத்தில் ’கடந்த ஆண்டு தலைவர் பிறந்தநாளின் போது தான் ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இந்த ஒரு ஆண்டு அந்த படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் எங்கள் டீம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள இந்த நேரத்தில் ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் ’ஒய்யாரம்’ என்ற வீடியோ பாடலை வெளியிடுகிறேன் என்று கூறி அந்த பாடலை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த கார்த்திக் சுப்பராஜ் ’நீண்ட ஆயுள், மகிழ்ச்சி, ஸ்டைல் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களுடன் என்றும் நீங்கள் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் ’பேட்ட’ படத்தின் அன்சீன் காட்சி இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.