ஆஸ்கார் வாங்கினாலும் இதற்கு ஈடாகாது: கார்த்திக் சுப்புராஜின் மனம் திறந்த பேச்சு
- IndiaGlitz, [Monday,December 10 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நேற்று நடந்த ஆடியோ விழாவில் இந்த படம் உருவான விதம் குறித்து பேசினார்.
நான் சின்ன வயதில் இருந்தே தலைவர் ரசிகர். நான் சினிமாவுக்கு வந்தபோது என் படத்தை தலைவர் பாராட்டினால் போதும் என்று தான் நினைத்தேன். 'பீட்சா' படம் வெளியானபோது தலைவர் என்னை போனில் அழைத்து பாராட்டினார். அதுவே எனக்கு பிரமிப்பாக இருந்தது. அதன்பின் 'ஜிகர்தண்டா' வெளியானபோது என்னை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது என்னிடம் ஸ்கிரிப்ட் இருக்குதா? என்று கேட்டார். நான் தலைவருக்கு கதை சொன்னவுடன் அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அதனால் அவர் என் படத்தில் நடிக்காமல் போய்விடுவாரோ என பயந்தேன்.
2014ஆம் ஆண்டு அவருக்கு இந்த கதையை சொன்னேன். இப்போதுதான் என கனவு நனவாகியுள்ளது. தமிழ் சினிமாவிலேயே... ஏன் இந்திய சினிமாவிலேயே மனதாரப் பாராட்டுபவர் தலைவர் மட்டும்தான். அவருக்கு பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும்கூட, பாராட்டுவதில் இருந்து தவறமாட்டார். ‘2.0’ படத்தில் சொல்வது போல் அவரைச் சுற்றி பாஸிட்டிவ் ஆரா இருக்கிறது. அந்த பாஸிட்டிவ் ஆராவை எல்லோருக்கும் பெரிய கிலோமீட்டர் அளவுக்கு பரப்பி வருகிறார்.
படப்பிடிப்பின்போது அவர் எப்படி நடக்கிறார், எப்படி புத்தகம் படிக்கிறார் என்பதை பார்த்து ரசித்துக்கொண்டே இருப்பேன். என்னை தவிர வேறு யார் அவரிடம் அதிகமாக பேசினாலும் எனக்கு பொறாமையாக இருக்கும், அது என் மனைவியாக இருந்தாலும். நான் ஆஸ்கார் விருதே வாங்கினாலும், அது தலைவர் படத்தை இயக்கியதற்கு ஈடாகாது.
இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் பேசினார்.