'ரஜினி சார் சொன்னது எனக்கு அப்போது புரியவில்லை, இப்போது புரிகிறது: 'PS 2' இசை விழாவில் கார்த்தி..!

  • IndiaGlitz, [Thursday,March 30 2023]

’பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் கார்த்தி பேசியதாவது:

சினிமா என்பது வாழ்க்கையை அழகாக்கும் ஒரு விஷயம். அது எல்லா ஊர்களிலும் எல்லா நாட்டிலும் கிடைப்பதில்லை. நான் வெளிநாட்டுக்கு சென்று இருந்த போது ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இயக்குனர் என்னிடம் ’இந்தியாவில் எல்லோரும் காசு கொடுத்து தியேட்டரில் வந்து சினிமா பார்க்கிறார்களா என்று ஆச்சரியமாக கேட்டார். எனவே சினிமா என்ற விஷயம் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர் நாம் எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியுடன் தியேட்டரில் சென்று சினிமாக்களை பார்த்தோம். அந்த வகையில் இந்தியாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் எனக்கும் ஒரு சின்ன இடம் கொடுத்த ரசிகர்கள் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சோழர்கள் கொடி எல்லா இடத்திலும் பறந்தது போல் இந்த படம் இதுவரை ரிலீஸ் ஆகாத இடத்தில் எல்லாம் சென்று ரிலீஸ் ஆகிறது என்பதை நினைக்கும்போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படி ஒரு சாதனையை செய்ய உதவி செய்தது நீங்கள் தான்.

நான் ’கைதி’ படப்பிடிப்பில் இருக்கும் போது மணிரத்னம் அலுவலகத்திலிருந்து எனக்கு போன் வந்தது. நான் அவரை நேரில் சென்று பார்த்த போது ’பொன்னியின் செல்வன்’ படத்தின் வந்தியத்தேவன் கேரக்டரை செய்கிறாயா? என்று கேட்டார். நான் உடனே யோசிக்காமல் ’எந்த கேரக்டர் என்றாலும் செய்வேன் சார்’ என்று சொன்னபோது அவர் அமைதியாக இருந்தார்.

அவரிடம் பேசி முடித்துவிட்டு நான் காரில் வரும்போது எனக்கு மனதில் ஒரு மருதநாயகம் போல் தோன்றியது. சிவாஜி சார் அவர்களின் வசனம் கூட என் மனதில் தோன்றியது. ஆனால் நான் இந்த படத்தில் முதல் காட்சியில் ‘தம்பி விடு’ என்று வசனம் பேசும் போது பலமுறை டேக் வாங்கினேன். அப்போதுதான் எனக்கு ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தில் ரஜினி சார் சொன்ன கதை எனக்கு புரிந்தது.

இந்த படத்தில் நான் த்ரிஷாவை முதல் முதலில் பார்க்கும் காட்சியை கல்கி அவர்கள் பல பக்கங்களுக்கு வர்ணித்து எழுதியிருப்பார். ஆனால் மணி சார் அந்த காட்சியை ஒரு சில நிமிடங்களில் காட்சிப்படுத்தினார். அப்போது புரிந்தது எனக்கு இந்த படத்தை மணி சார் தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது என்று.

நான் ’பையா’ படத்தில் நடித்த போது தான் எனக்கு அதிகமான லவ் லெட்டர் வந்தது. அதற்கு பிறகு வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்த பின்னர் இன்ஸ்டாகிராமில் எனக்கு அதிகமாக மெசேஜ் வருகிறது. இந்த படத்தில் நிறைய லவ் இருக்கிறது, லவ் தான் வாழ்க்கையை அழகாக்கும், இந்த லவ்வை நீங்கள் மணி சார் பார்வையில் இந்த படத்தை பார்க்கும்போது அனுபவிக்கலாம்’ என்று கார்த்தி கூறினார்.