ரஜினி, கமலை அடுத்து விஜய்யிடம் ஆதரவு கேட்ட விஷால் அணி

  • IndiaGlitz, [Tuesday,August 18 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாகிவிட்டது. இதன் உச்சகட்டமாக நேற்று விஷால் அணியினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் தான் மலேசியாவில் படப்பிடிப்பில் இருப்பதாக ரஜினி கூறினாலும் கண்டிப்பாக ஓட்டு போட வருவேன் என்று அவர் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


அதே நேரத்தில் உலக நாயகன் கமல், விஷால் அணிக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. நாசர் அளித்த பேட்டியில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றம் வேண்டும் என்று கமல் விரும்புவதால் கண்டிப்பாக எங்களுக்கு ஓட்டு போடுவதாக கூறியுள்ளார் என நாசர் தெரிவித்துள்ளார்.மேலும் பிரபல நடிகையும் சரத்குமாருடன் நாட்டாமை போன்ற படங்களில் நடித்த நடிகை குஷ்பு தனது ஓட்டு விஷாலுக்கே என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

கமல், ரஜினியை அடுத்து கோலிவுட்டில் பெரிய நடிகராக விளங்கி வரும் இளையதளபதி விஜய்யையும் நேற்று கார்த்தி மற்றும் நாசர் சென்று சந்தித்து தங்கள் ஆதரவை கேட்டுள்ளனர். இதுகுறித்து கார்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஸ்கூல், காலேஜில் படிக்கும்போதே விஜய்யை எனக்கு நன்கு தெரியும். எனவே அவரை கேஷுவலாக மீட் செய்து நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு போட வாருங்கள் என்று அவரிடம் கேட்டுக்கொண்டோம். பத்து வருடங்கள் கழித்து நடைபெறும் தேர்தலில் அனைத்து நடிகர்கள் வந்து ஓட்டு போடுவதே ஒரு பெரிய விஷயமதான். விஜய் எங்கள் அணிக்கு ஆதரவு தருவார் என்று நம்புவோம்' என்று கூறினார். விஷால் அணி சுறுசுறுப்புடன் களமிறங்கி ரஜினி, கமல், விஜய் என அடுத்தடுத்து ஆதரவு கேட்டுள்ள நிலையில் சரத்குமார் அணி என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்