இந்த ஆண்டு 2 படம், அடுத்த ஆண்டு 2 படம்.. பிரியாணி பக்கெட்டை தூக்கும் கார்த்தி..!

  • IndiaGlitz, [Tuesday,July 09 2024]

கார்த்தி நடித்து முடித்துள்ள இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டும் இரண்டு படங்கள் வெளியாகும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கார்த்தி நடிப்பில் ’96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மெய்யழகன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார் என்பதும் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கார்த்தி, ‘வா வாத்தியாரே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்தியுடன் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார் என்பதும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய இந்த படமும் இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ’சர்தார் 2’ மற்றும் ’கைதி 2’ ஆகிய இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக கார்த்தி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். ’சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க இருப்பதாகவும், ’கூலி’ படத்தை முடித்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’கைதி 2’ படத்தை தொடங்க உள்ளதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.

மறுபடியும் பிரியாணி பக்கெட்டை தூக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் ’கைதி 2’ படம் குறித்து ஜாலியாக தெரிவித்துள்ளதை அடுத்து கார்த்தி ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.