நாளை மறுநாள் கார்த்தி ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்..!

  • IndiaGlitz, [Tuesday,May 23 2023]

நாளை மறுநாள் நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட இருப்பதை அடுத்து அன்றைய தினம் அவரது ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் மே 25ஆம் தேதி அவரது ரசிகர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாளை மறுநாள் அவரது பிறந்த நாள் கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினத்தில் அவர் நடித்து வரும் ’ஜப்பான்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை முதலில் தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின்படி இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தியின் 25வது படமான இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் இந்த படத்தில் கார்த்தி, அனு இமானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ராஜூ முருகன் இயக்கி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், அன்பறிவு ஸ்டாண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.