கார்த்தி-லிங்குசாமியின் 'பையா 2' படத்தில் மீண்டும் ஒரு திருப்பம்.. 

  • IndiaGlitz, [Tuesday,June 06 2023]

கார்த்தி நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பையா’. தமன்னா நாயகி ஆக நடித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’பையா 2’ படத்தின் தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் முதலில் ஆர்யா இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து ’பையா 2’ படத்தில் கார்த்தியே நடிக்க இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி கார்த்தி மற்றும் லிங்குசாமி மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைவது உறுதி என்றும் ஆனால் அதே நேரத்தில் அந்த படம் ’பையா 2’ இல்லை என்றும் லிங்குசாமி கூறிய புதிய கதையில் தான் கார்த்தி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி என்றால் ’பையா 2’ படத்தில் முன்பே திட்டமிட்டபடி ஆர்யா தான் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்தி தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடிந்த பின்னர் தான் கார்த்தி - லிங்குசாமி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.