'காற்று வெளியிடை'- ட்ரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Thursday,March 09 2017]

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த காற்று வெளியிடை' படத்தின் ட்ரைலர் வெளியாகிவிட்டது. இயக்குனர் மணி ரத்னம், நடிகர் கார்த்தி ஆகியோர் முதல் முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீது ஏற்கனவே பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை, ட்ரைலர் அதிகரித்திருக்கிறதா குறைத்திருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

இந்தப் படம் காஷ்மீரில் நடக்கும் காதல் கதை என்பதும், கார்த்தி ஒரு விமான பைலட்டாகவும் நாயகி அதிதி ராவ் ஹைதரி மருத்துவராகவும் நடித்திருக்கிறார் என்ற தகவல்கள் நாம் அனைவரும் அறிந்தவையே. ட்ரைலர் அந்தத் தகவல்களை மணி ரத்னம் ஸ்டைலில் உறுதி படுத்துகிறது.
மீசை தாடியில்லாத கார்த்தி மேலும் இளமையாகத் தெரிகிறார். காதல் வசனங்களையும் எமோஷனல் வசனங்களையும் பேசும் விதம் அவரிடமிருந்து மற்றுமொரு சிறந்த நடிப்பை எதிர்பார்க்க வைக்கின்றது. புதுமுக அதிதி ராவ் ஹைதரி அழகாக இருக்கிறார். மணி ரத்னம் படத்தின் நாயகிகள் அழகாக இருப்பது புதிதல்ல.
ரவிவர்மன் ஒளிப்பதிவில் காஷ்மீரின் பனிச் சரிவுகளையும் இள வெய்யில் பொழுதுகளையும் பார்ப்பது மிக இனிமையாக உள்ளது. ஏ.ஆர். ரகுமானின் துள்ளலான பின்னணி இசையும் இது ஒரு இளமை ததும்பும் காதல் படம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. கூடவே மணியின் ஷார்ப்பான காதல் வசனங்களும் படம் அலைபாயுதே', ஓ காதல் கண்மணி' போன்ற மறக்க முடியாத காதல் படங்களைப் போல் மற்றுமொரு காதல் படத்தை எதிர்பார்க்க வைக்கின்றன.
மொத்தத்தில் காற்று வெளியிடை' படத்தின் ட்ரைலர் மணி ரத்னம் பாணியில் இது ஒரு ரசனையான காதல் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது என்று தயக்கமின்றி சொல்லலாம்.