மணிரத்னம்-கார்த்தியின் 'காற்று வெளியிடை'. திரை முன்னோட்டம்
- IndiaGlitz, [Tuesday,April 04 2017]
கோலிவுட் திரையுலகில் சீனியர் இயக்குனர்கள் பலர் தற்போதைய இளைஞர்களின் டிரண்டுக்கு மாற முடியாததால் திரையுலகில் இருந்து ஒதுங்கிவிட்ட நிலையில் இன்னும் ஃபீல்டில் இருக்கும் ஒரே பழம்பெரும் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் மட்டுமே. மணிரத்னம் என்பவரை யார் என்றே தெரியாத ஒருவர் அவரது 'ஓகே கண்மணி' படத்தை பார்த்தால் நிச்சயம் 60 வயது இயக்குனர் இயற்றிய படம் என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள். அந்த அளவுக்கு அந்த படத்தில் இளமையும் ஃபிரெஷ் காதலும் இருந்தது. இந்த நிலையில் 'ஓகே கண்மணி' படத்திற்கு பின்னர் மணிரத்னம் இயக்கியுள்ள 'காற்று வெளியிடை' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முன்னோட்டம் குறித்து தற்போது பார்ப்போம்
மணிரத்னம் இயக்கிய மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று 'ரோஜா', ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியர் தீவிரவாதிகளால் கடத்தப்படுவதும், கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவரது மனைவி, கணவனை மீட்பதும்தான் கதை. கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு கதையை கையில் எடுத்து தனது பாணியில் அதே நேரத்தில் முழுக்க முழுக்க இளமையை கலந்து கொடுத்துள்ள திரைப்படம்தான் 'காற்று வெளியிடை'
மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக திரையுலகில் நுழைந்த நடிகர் கார்த்தி, அதன்பின்னர் பிரபல நடிகராக மாறினாலும் தனது குருநாதருடன் மீண்டும் இணையும் வாய்ப்பை அவருக்கு கொடுத்த படம் தான் 'காற்று வெளியிடை'. இதுவரை நடித்திராத பைலட் கேரக்டர், இதுவரை போடாத வித்தியாசமான கெட்டப் என கார்த்தியின் திரையுலக வாழ்வில் இந்த படம் மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும் என்று கூறினால் அது மிகையாகாது.
சமீபத்தில் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி இந்த படத்தில் நடித்தது குறித்து கூறியபோது, 'இது எனது கனவுப்படம் என்றால் அது நிச்சயமாக பொய்தான். ஏனெனில் இவ்வளவு அழகான கனவை நான் இதுவரை கண்டதில்லை. அமெரிக்காவில் பொறியியல் படித்துவிட்டு சினிமாவுக்கு போகிறேன் என்றதும் பலர் என்னை ஆச்சரியமாக பார்த்தனர். ஆனால் எனக்கு மணிரத்னம் அவர்களிடம் தொழில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரே நினைப்புதான் மனதில் இருந்தது. அதனால்தான் சினிமாவுக்கே வந்தேன்' என்று கூறினார்.
பாலிவுட்டில் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற அதிதிராவ் ஹைதி தான் இந்த படத்தின் நாயகி. மணிரத்னம் படத்தின் திரைக்கதையில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது பல படங்களில் நிரூபணமாகியுள்ள நிலையில் இந்த படத்திலும் அதிதி ஒரு பலம் பொருந்திய டாக்டர் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அதிதி கூறியதாவது: “சின்ன வயசுக் கனவு, மணி சாரால இப்போ நிஜமாகியிருக்கு. மணிசார் திரைக்கதையும், ரவிவர்மன் சாரோட மேஜிக்கல் கேமிராவும் படத்தை வேற பரிமாணத்துல கொண்டு வந்துருச்சு. மணி சார் படத்துல நடிக்கிறதுனாலே தனி எனர்ஜி வந்துடும். நிஜமாகவே மெட்ராஸ் டாக்கீஸ் டீம் என்னோட குடும்பம் மாதிரிதான். என்னோட ஃபேவரைட் ஸ்டார் கார்த்தி. அவரோடையே நடிக்கிறதுலாம் நினைச்சுக்கூடப் பார்க்கலை. ஃபீல் ஹேப்பி & லவ்லி..”
இந்த படத்தின் மிக முக்கிய மற்றொரு அம்சம் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். மணிரத்னம்-ரஹ்மான் கூட்டணி கடந்த 1992ஆம் ஆண்டு 'ரோஜா' படத்தில் இருந்து 25 ஆண்டுகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த கூட்டணி இணைந்த ஒருசில படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும் இதுவரை பாடல்கள் தோல்வி அடைந்ததே இல்லை என்பதே இந்த கூட்டணியின் சிறப்பு. மணிரத்னம் அவர்களுடன் 25 ஆண்டு காலம் பயணம் செய்த ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது, 'மணிரத்னம் அவர்களுடன் பணிபுரியும் போது எப்போதும் ஒரு அழுத்தம் இருக்கும். அவரோடு பணியாற்றுவதால் அல்ல. நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டோம். ஓ இவர்கள் இருவரும் சேர்கிறார்கள். என்ன செய்யப்போகிறார்கள் என எதிர்பார்ப்பு உருவாகும். அடுத்து என்ன மணிரத்னம் படம் என மக்கள் கேட்பார்கள். அப்போது "அடடா" என உணர்வேன். ஆனால் இப்போது நிலை மொத்தமாக மாறிவிட்டது. நாங்கள் ஒரு 'பிராண்ட்' உருவாக்கிவிட்டோம். மக்கள் கண்டிப்பாக புதிதாக எதிர்பார்ப்பார்கள் என மனது தன்னிச்சையாக தயாராகிவிடும்' என்று கூறினார்
இந்த படத்தின் இசைவிழாவின் போது ரஹ்மான் குறித்து மணிரத்னம் கூறியபோது, 'இந்த 25 ஆண்டுப் பயணம் நேத்து நடந்த மாதிரி இருக்கு. அப்போ இருந்த அதே சிரிப்புதான் இப்பவும் ரஹ்மான்கிட்ட பார்க்குறேன். ஆனா இப்போ ரஹ்மான் ரொம்ப பெரிய இடத்துக்குப் போய்ட்டது ரொம்ப சந்தோஷமான விஷயம். என்னோட ஒவ்வொரு படத்துக்குமே, அவரோட முதல் படம் மாதிரி ஸ்பெஷலா புதுசாதான் மியூசிக் கொடுப்பார். அடுத்த நாள் ஷூட்டிங் இருக்கும். முந்தைய நாள் பாட்டு ட்யூன் கேட்கலாம்னு போவோம். ஆனா படத்துக்கான தீம் மியூசிக் முடிச்சி வச்சிருப்பார். நாளைக்கு ஷூட்டிங் இருக்கே'னு அவர்கிட்ட கோவப்படக்கூட முடியாது. ஏன்னா அவர் போட்டு வச்சிருக்குற தீம் மியூசிக் கேட்டுட்டோம்னா, மத்ததெல்லாம் மறந்துபோய்டும். இசையைத் தேடிப்பிடிச்சுக் கொடுப்பார் ரஹ்மான். இவரும் வைரமுத்து சாரும் இந்த 25 ஆண்டுகளாக பொறுமையா என்கூட இருந்துட்டாங்க என்று கூறினார்.
மணிரத்னம் படம் என்றாலே பொதுவாக கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு படத்தின் பெரும்பகுதி இருட்டாக இருக்கும் என்பதுதான். ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க பிரைட்டாக இருக்கும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். ஏனெனில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் என்பதால்தான். அதேபோல் 'ஓகே கண்மணி' படத்திற்கு பின்னர் மீண்டும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இணைந்துள்ளது இந்த படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம் ஆகும்
மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதால் கடந்த சில நாட்களாகவே பிரமாதமாக புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.
'காற்று வெளியிடை' படத்தின் அனைத்து அம்சங்களும் பாசிட்டிவ் ஆக இருப்பதால் கண்டிப்பாக இன்னொரு வெற்றியை மணிரத்னம் பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 'காற்று வெளியிடை' டீமுக்கு நமது தரப்பில் இருந்து அட்வான்ஸ் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம். வரும் வெள்ளியன்று இந்த படத்தின் திரைவிமர்சனத்தில் மீண்டும் சந்திப்போம்