'ஆர்.ஆர்.ஆர்' படத்திற்கு திடீரென கிளம்பிய எதிர்ப்பு: படக்குழுவினர் அதிர்ச்சி!

பிரமாண்ட இயக்குனர் ஆர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷனுக்காக இந்தியா முழுவதும் படக்குழுவினர் சுற்றி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என ஒரு பான் இந்தியத் திரைப்படமாக ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்துக்கு திடீரென கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி திரைப்படமான ‘ஜேம்ஸ்’ திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வெளியானால் ‘ஜேம்ஸ்’ படம் அனைத்து திரையரங்கிலும் தூக்கப்பட்டுவிடும் என்பதால் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள், ’ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தை கர்நாடகாவில் ஒரு திரையரங்கில் கூட வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக இளைஞர்கள் திடீரென போராட்டம் நடத்தி வருவது ’ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் அடுத்த மாதம் கன்னட நடிகர் யாஷின் ‘கே.ஜி.எப்2’ என்ற பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த போராட்டம் தேவையற்றது என யாஷின் ரசிகர்கள் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.