விபத்தில் சிக்கியவரை காப்பாற்றாமல் மனிதாபிமானமின்றி புகைப்படம் எடுத்த பொதுமக்கள்.

  • IndiaGlitz, [Thursday,February 02 2017]

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் போலீஸ், கோர்ட் என்று அலைய வேண்டிய நிலை வரும் என்றுதான் பலர் அதில் ஈடுபடுவதில்லை. இதற்காகத்தான் சுப்ரீம் கோர்ட்டே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களை துன்புறுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அப்படி இருந்தும் நடைமுறையில் ஒரு விபத்து நடந்தால் உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற இன்னும் பலர் முன்வருவதில்லை.

ஆனால் அதே நேரத்தில் விபத்து நடந்தால் அதை வேடிக்கை பார்ப்பது மட்டுமின்றி மொபைல் போனில் படமெடுத்து ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் பதிவு செய்து லைக் வாங்கும் கொடூரம் அரங்கேறி வருகிறது. நேற்று காலை கர்நாடகத்தின் கொப்பல் என்ற பகுதியில் அன்வர் அலி எகலாஸ்புர் என்ற 18 வயது இளைஞர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவர் மீது பேருந்து ஒன்று மோதியது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடிய அன்வரை சுற்றி நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததோடு, ரத்தத்துடன் கூடிய புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இறுதியில் ஆம்புலன்ஸ் வந்து அன்வரை மருத்துவமனையில் சேர்க்கும் முன் ஏராளமான ரத்தம் உடலில் இருந்து வெளியேறிவிட்டதால் அவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றாமல் சமூக வலைத்தள லைக்குகளுக்காக மனிதாபிமானத்தை தொலைத்துவிட்டவர்களுக்கு அதே சமூக வலைத்தளங்களில் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.