2 ஏக்கர் தக்காளி செடிகள் நாசம்… விலையேறிய பின்பு விவசாயிக்கு நடந்த கொடுமை?
- IndiaGlitz, [Friday,August 04 2023]
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு எகிறி வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக புலம்பி வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டத்தையே அனுபவித்து வருவதாகக் கூறும் சிலர் தற்போது கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் சில விவசாயிகள் ஒருசில தினங்களிலேயே லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2 ஏக்கரில் தக்காளி பயிரிட்ட ஒரு விவசாயின் நிலத்தை மர்மநபர்கள் சிலர் ஒரே இரவில் நாசமாக்கிய கொடுமையான சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலுள்ள குண்ட்லுபேட்டை தாலுகா பகுதியில் இருக்கும் கெப்பேபுரா எனும் கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சுநாத். விவசாயத்தை தொழிலாகச் செய்துவரும் இவர் தக்காளி பயிரிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் தக்காளி விலை அதிகரித்து வந்த நிலையில் கடன் வாங்கி தனது 2 ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டு இருக்கிறார். இதையடுத்து இன்னும் ஒரு சில தினங்களில் தக்காளியை அறுவடை செய்துவிடலாம் என்ற அளவிற்கு அவருடைய நிலத்தில் தக்காளி விளைந்திருக்கிறது. சில வியாபாரிகள் அவருடைய தக்காளியை நேரில் வந்து பார்வையிட்டு சென்றிருந்தனர்.
இதனால் மஞ்சுநாத் தனது தக்காளி நிலத்தை கவனமாகக் கண்காணித்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு 9 மணிவரை அதற்கு காவல் இருந்த நிலையில் மீண்டும் வியாழக்கிழமை காலை நிலத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். ஆனால் ஒட்டுமொத்த தக்காளி செடிகளும் நாசமாக்கப்பட்டு, அழிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்த அவர் பதறிப்போய் பேகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
மஞ்சுநாத் தனது நகைகளை அடமானம் வைத்து சுயஉதவிக் குழுக்களில் கடன் உதவிப்பெற்று 2 லட்சம் செலவில் தக்காளியை பயிரிட்டதாகவும் ரூ.15 – 20 லட்சம் பெறுமானம் கொண்ட தக்காளியை ஒரே இரவில் மர்மநபர்கள் அடித்து நாசமாக்கி விட்டதாகவும் தற்போது புலம்பி வருகிறார். இதையடுத்து அரசாங்கம் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தக்காளி விலையேற்றத்தால் ஆங்காங்கே திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இதனால் சில வியாபாரிகள் பார்டி கார்ட் முதற்கொண்டு கண்காணிப்பு கேமராக்களை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நிலத்தில் விளைந்து நின்ற தக்காளி செடிகளை மர்மநபர்கள் நாசம் செய்திருப்பது தனிப்பட்ட விரோதமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.