'கோச்சடையான்' பட வழக்கு: லதா ரஜினிகாந்த் குறித்து முக்கிய உத்தரவு பிறப்பித்த கர்நாடகா ஐகோர்ட்!
- IndiaGlitz, [Thursday,August 11 2022]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’கோச்சடையான்’ பட வழக்கு குறித்து கர்நாடக ஐகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
’கோச்சடையான்’ திரைப்படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த நிலையில் அந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. இதனை அடுத்து 2014ஆம் ஆண்டு பெங்களூர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இந்த படத்தின் நிதி விஷயங்கள் குறித்து தயாரிப்பு நிறுவனம் கருத்துக்கூற தடை உத்தரவு பெற்றார்
இதனை எதிர்த்து பெங்களூரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் புகார் ஒன்றை அளித்தது. அந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் லதா ரஜினி பெற்ற தடை உத்தரவை நீக்கியதுடன், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது
இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு கர்நாடக ஹைகோர்ட் லதா ரஜினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது. இருப்பினும் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர அனுமதி வழங்கியது. இந்த நிலையில் போலீசாரின் குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டுமென லதா ரஜினிகாந்த் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் லதா ரஜினிக்கு எதிராக ஏமாற்றுதல் மற்றும் தவறான தகவல் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாகவும், ’கோச்சடையான்’ படத்திற்கு கடன்பெற்ற விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு விசாரணையில் இருந்து லதா ரஜினிகாந்துக்கு விலக்கு அளித்து கர்நாடகா ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.