'காலா' வழக்கு: கைவிட்டது கர்நாடக நீதிமன்றம்
- IndiaGlitz, [Tuesday,June 05 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் உலகம் முழுவதும் இம்மாதம் 7ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது. தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் அமெரிக்காவில் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. காவிரி பிரச்சனையில் ரஜினிகாந்த், கர்நாடக மாநிலத்திற்கு எதிராக கருத்து கூறியதாகவும், அதனால் 'காலா' திரைப்படத்தை கர்நாடகத்தில் வெளியிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் 'காலா' படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 'காலா திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளுக்கு கர்நாடகா அரசு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக விசாரணை செய்யப்பட்டது. அப்போது 'காலா' திரைப்படத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட முடியாது என்றும் இதுகுறித்து அரசிடம்தான் முறையிட வேண்டும் என்றும் கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. இதனால் 'காலா' படம் கர்நாடகத்தில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.