கொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....! தடை விதித்த அரசு...!

  • IndiaGlitz, [Sunday,May 16 2021]

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டில், தனிமைப்படுத்தி இருக்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். லேசான கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்கள், வீடுகளிலே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் நகர்ப்புற மக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. கோவிட் பாதிப்பு ஏற்பட்ட மக்கள் கட்டாயமாக கொரோனா சிகிச்சை மையங்களில், அனுமதித்து தான் சிகிச்சை பெற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.



இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயண் கூறியிருப்பதாவது, கர்நாடகாவில் ஆரம்ப சுகாதார மையங்களை, கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் விடுதிகள் இருந்தால், அவை கொரோனா சிகிச்சையளிக்கும் மையமாகவும் மாற்றப்படும். தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவார்கள்.

நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதில் சிரமம் உள்ளதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 ஐசியூ படுக்கைகள் அமைத்து தரப்படும். சுமார் 207 சமூக சுகாதார மையங்கள் இங்கு உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு மையத்திலும், 30 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு மையத்திற்கு தலா 5 ஐசியூ படுக்கைகள் அமைத்து தரப்பட்டு, அனைத்து படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதி செய்து தரப்படும். ஒரு நிமிடத்தில் சுமார் 200 - 300 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடிய, ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் ஒவ்வொரு சுகாதார மையத்திலும் அரசு சார்பில் அமைத்து தரப்படும் என அவர் கூறியுள்ளார்.