இரு கைகளாலும் எழுதி உலகச் சாதனை படைத்த 17 வயது சிறுமி…வைரல் சம்பவம்!!!
- IndiaGlitz, [Thursday,September 17 2020]
கர்நாடக மாநிலம் மங்களூருவில் 17 வயது சிறுமி ஒருவர் ஒரே நிமிடத்தில் இரு கைகளாலும் 45 வார்த்தைகளை எழுதி உலகச் சாதனை படைத்து இருக்கிறார். இதற்குமுன் 25 வார்த்தைகள் எழுதியது மட்டுமே உலகச் சாதனையாக கருதப்பட்டது. அந்தச் சாதனையை 17 வயது சிறுமி முறியடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தின் தட்சிணக் கன்னடா மாவட்டம் அடுத்த மங்களூரு பகுதியில் பயிற்சி நிலையம் நடத்தி வருபவர் கோபர்கர். அவரது மகள் ஆதி நிஸ்ரூபா(17). இவர் பிறந்தது முதல் பள்ளிக்கூடம் பக்கமே சென்றது இல்லையாம். அப்பா நடத்திவரும் பயிற்சி நிலையத்திலேயே படித்து வருகிறாராம். இந்தாண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் இவர் தற்போது உலகச் சாதனைப் புரிந்து இருக்கிறார்.
கோபர்கர் நடத்தி வரும் பயிற்சி நிலையத்தில் மாணவர்களது தனித்திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் தேர்வுகளுக்கு மாணவர்கள் ஒரு மாதம் மட்டுமே படிக்கின்றனர். மற்ற நேரங்களில் ஓவியம், இசை, நாடகம் போன்ற திறமைகளையும் வளர்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில் ஆதி நிஸ்ரூபா இரு கைகளாலும் எழுதும் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
இதைக் கேள்விப்பட்ட உத்திரபிரதேசத்தை சேர்ந்த கல்வி நிறுவனம் ஒன்று மாணவி ஆதி நிஸ்ரூபாவிற்கு நேரில் வந்து இரு கைகளாலும் எழுதும் தேர்வை நடத்திருக்கிறது. அந்தத் தேர்வில் ஒரே நிமிடத்தில் இரு கைகளாலும் 45 வார்த்தைகளை எழுதியிருக்கிறார் ஆதி நிஸ்ரூபா. இதனால் உலகச் சாதனை படைத்தற்கான சான்றிதழை அக்கல்வி நிறுவனம் வழங்கி மேலும் பாராட்டுகளைத் தெரிவித்து இருக்கிறது. இச்சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது.
இரு கைகளாலும் எழுதும் திறமையைத் தவிர இவருக்கு இசையிலும் அலாதி ஆர்வம் உண்டாம். தற்போது இந்துஸ்தானி இசையைக் கற்று வருகிறாராம். அதோடு குரலை மாற்றிப் பேசும் திறமையும் இவருக்கு கைவந்த கலையாம். மேலும், கண்ணைக் கட்டிக் கொண்டே எழுதும் ஆற்றலையும் இவர் வளர்த்துக் கொண்டிருக்கிறாராம். கித்தார், நாடகம், ஓவியம் போன்றவற்றில் கலந்து கொண்டு இதுவரை 40 கலைகளில் பங்கு பெற்று அதைக் குறித்த தொகுப்பு ஒன்றையும் கடந்த ஆண்டு வெளியிட்டு இருக்கிறார்.
கடந்த 2014 வரை இவர் 1,600 நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பல பரிசுகளை வென்றிருக்கிறார். அதைவிட அதிர்ச்சி ஏற்படுத்தும் இன்னொரு தகவல் 2 வயதிலேயே எழுதத் தொடங்கிய ஆதி நிஸ்ரூபா அப்போதே 30 பக்கங்கள் வரை எழுதுவராம். இப்படி இவரது சாதனை பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. தற்போது ஆதி நிஸ்ரூபா இரு கைகளாலும் எழுதி உலகச் சாதனை படைத்து இருக்கிறார். அவருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.