'காலா' படத்திற்கு கர்நாடகா தடை:
- IndiaGlitz, [Wednesday,May 30 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்திற்கும், தமிழக்த்திற்கும் காலங்காலமாக நடந்து வரும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராகவும் தமிழகத்திற்கு ஆதரவாகவும் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைவது ஒன்றே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என அவர் கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில் கர்நாடக மக்களுக்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து கூறியதால் அவர் நடித்த 'காலா' திரைப்படத்திற்கு தடை விதிப்பதாக திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.
கர்நாடக வர்த்தக சபையின் இந்த முடிவினை அடுத்து கர்நாடகத்தில் 'காலா' படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை பெற்ற கோல்டி நிறுவனத்தினர் 'காலா' படத்தை திரையிட மாட்டோம் என்று கூறியுள்ளனர். இந்த படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழும் என்பதால் படத்தை திரையிடுவதை நிறுத்தி வைப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே கமல், ரஜினி படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க முடியாது என்று வாட்டாள் நாகராஜ் கூறியிருந்த நிலையில் கர்நாடக வர்த்தக சபை இந்த முடிவினை எடுத்துள்ளது. இருப்பினும் 'காலா' படக்குழுவினர் கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.