அரசு அலுவலகத்தில் உடலுறவுகொண்டாரா அமைச்சர்?
- IndiaGlitz, [Wednesday,December 14 2016]
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ராஜசேகர் முலாலி, அம்மாநில அமைச்சர் ஒருவர், அரசு அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டதாக அதிர்ச்சிகரமான பாலியல் புகாரை சுமத்தியுள்ளா. இதையடுத்து, மேட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடக கலால் வரித் துறை அமைச்சர் ஹெ.ஒய்.மேட்டி, தன்னிடம் பணியிடமாற்றம் கேட்டு வந்த ஒரு பெண்ணிடம் அரசு அலுவலகத்தில் வைத்து உடலுறவு கொண்டதாகவும் அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக கூறிவருகிறார் ராஜசேகர். இதையடுத்து மேட்டியின் ஆதரவாளர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறையில் புகாரளித்துள்ளார். கொலை மிரட்டலுக்கான ஆடியோ ஆதாரத்தையும் காவல்துறையினரிடம் கொடுத்துள்ளார்.
மேட்டி, ராஜசேகரைத் தனக்கு யார் என்றே தெரியாது என்றும் அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை என்றும் கூறிவந்தார். ராஜசேகரின் குற்றச்சாட்டில் இடம்பெற்றுள்ள பெண்ணும் அவரது கணவரும்கூட இந்தக் குற்றசாட்டுகளை மறுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை மாநில முதலமைச்சர் சித்தராமையாவைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை தந்தார் அமைச்சர் மேட்டி. முதல்வரும் அவரது ராஜினாமாவை ஏற்குமாறு மாநில ஆளுனருக்கு பரிந்துரைத்துள்ளார். இந்த சர்ச்சை மீதான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
தன் பெயரில் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சையால் அரசுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்படுவதைத் தவிர்க்க தானாகவே முன்வந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அறிவித்துள்ள மேட்டி தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று நிரூபிக்காமல் ஓய மாட்டேன் என்று உறுதியேற்றுள்ளார்.