ரஜினி கடைசி மூச்சு வரை கன்னடராக இருக்க வேண்டும்: கர்நாடக எம்.எல்.ஏ

  • IndiaGlitz, [Thursday,May 31 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் பிறப்பால் கன்னடராக இருந்தாலும், அவர் தமிழர்களுக்கு ஆதரவாக காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதால் அவருடைய 'காலா' படம் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கர்நாடக மாநிலத்தின் ஆர்.ஆர்.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முனிரத்னா வெற்றி பெற்றார். எம்.எல்.ஆக வெற்றி பெற்றுள்ள இவர் கர்நாடக தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ரஜினி குறித்து கூறியதாவது:

கர்நாடகத்தை பாதிக்கும் வகையில் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம். மேலும் ரஜினி தனது கடைசி மூச்சு வரை கன்னடராக இருக்க வேண்டும். 'காலா' பிரச்சனை குறித்து சங்க உறுப்பினர்களுடன் பேசுவேன். ஆனால் கர்நாடகத்தை பாதிக்கும் கருத்துக்களை ரஜினி கூறினால் அவரது படம் கர்நாடகாவில் வெளியாக வாய்ப்பு இல்லை. ஏனென்றால் ரஜினிகாந்த் ஒரு கன்னடர். அவருக்கு கன்னட மக்கள் மீது பற்று இருக்க வேண்டும். ஒரு நடிகனாக அவருக்கு தமிழகத்தின் மீது பற்று இருக்கலாம். ஆனால் அவர் கன்னடர் என்பதை மறந்துவிட கூடாது. மேலும் காவிரியை காக்க நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்' என்று கூறினார்