கொட்டும் லஞ்சப்பணம்… கழிவுநீர் குழாயில் கரன்சி நோட்டுகளை பதுக்கிய சம்பவம்!
- IndiaGlitz, [Thursday,November 25 2021]
கர்நாடக மாநிலத்தில் உயர் அதிகாரி ஒருவர் தான் வாங்கிய லஞ்சப்பணத்தை கழிவுநீர் குழாயில் பதுக்கி வைத்துள்ளார். ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையின்போது இந்தக் கழிவுநீர் குழாயில் இருந்து ரூ.500 நோட்டுகளாகக் கொட்டியச் சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தியுள்ளனர். இதற்காக 68 இடங்களில் சுமார் 15 உயர் அதிகாரிகள் குறித்து சோதனை நடத்தப்பட்டு உள்ளது. 8 கண்காணிப்பாளர்கள் தலைமையில் 400 அதிகாரிகள் இணைந்து நடத்திய இந்தத் சோதனையில் பல கோடி ரூபாய்க்கு நகைகள், சொத்து ஆவணங்கள், ரொக்கப்பணம் போன்றவை கைப்பற்றப் பட்டுள்ளன.
இந்நிலையில் கல்புர்கி பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த சாந்தப்ப கவுடா என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது படு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. சாந்தப்ப கவுடா தனது வீட்டில் இருந்து கழிவுநீரை வெளியேற்றுவதற்காக குழாய் அமைத்திருக்கிறார். ஆனால் அந்தக் குழாய் கழிவுநீருடன் இணைக்கப்படவில்லை. இதனால் வறண்டுபோய் இருந்த கழிவுநீர் குழாயைப் பார்த்த அதிகாரிகள் சந்தேகம் கொண்டு அதைச் சோதித்துள்ளனர்.
அந்தக் குழாயில் பணம் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பணத்தை எடுப்பதற்காக அதிகாரிகள் குச்சியை விட்டு குத்தியபோது ரூ.500 நோட்டுகளாக விழுந்துள்ளது. இதினால் கிட்டத்தட்ட ரூ.13 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் கழிவுநீர் குழாயில் பணம் பதுக்கி அது சோதனையின்போது கொட்டிய சம்பவம் தற்போது கர்நாடக மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் சாந்தப்ப கவுடாவிடம் இருந்து ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.