கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன். கருணாஸ்
- IndiaGlitz, [Wednesday,May 30 2018]
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும்வரை இனி திமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று திமுக நேற்று கூறிய நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டத்தை திமுக ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி கருணாஸ் எம்.எல்.ஏவுகம் கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு அனுமதி அளிக்க மறுக்கின்றனர். மக்கள் பிரச்சனை குறித்து பேசியதால் எனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை விலக்கி விட்டார்கள். இந்த அரசு தவறுகளை சுட்டிக் காட்ட கூடாது என நினைக்கிறது
இந்த ஆட்சி விரைவில் கலைக்கப்பட்டு ஸ்டாலின் தலைமையில் ஆட்சியை அமைக்க வேண்டும். தமிழக முதல்வராக இருக்கும் ஒருவர் துப்பாக்கிச் சூட்டையே தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறுவது எவ்வளவு பெரிய கேவலம்.
நான் புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன். ஜெயலலிதா இன்னும் ஒரு வாரம் கழித்து அப்போலோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கூவத்தூரில் என்ன நடந்தது என்பது அனைத்தும் எனக்கு தெரியும். தமிழகத்துக்கு விடிவு காலம் கிடைக்கும் என்றால் கூவத்தூரில் என்ன நடந்தது என்ற ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன்.
இவ்வாறு கருணாஸ் பேசினார்