வறுமையில் வாடும் 'பருத்திவீரன்' பட பாடகி: அரசு உதவுமா?
- IndiaGlitz, [Saturday,July 25 2020]
கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கிய ’பருத்தி வீரன்’ திரைப்படத்தில் ’ஊரோரம் புளியமரம்’ என்ற பாடலின் மூலம் அனைவரது மனதையும் கவர்ந்தவர் நாட்டுப்புற பாடகி லட்சுமியம்மா. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவருக்கு ஓரளவுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. அவருடைய வறுமையும் நீங்கியது
இந்த நிலையில் திடீரென கடந்த 2016 ஆம் ஆண்டு இவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அதன் பின்னர் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் மருத்துவச் செலவுக்கே செலவழித்து விட்டார். அதன் பின் கையில் பணமில்லாமல் அரசு மருத்துவமனையில் சேர்ந்து குணமானார். இருப்பினும் அவரது குரல் வளம் முன்பைப் போல் இல்லை என்பதால் அவரால் தொடர்ந்து பாட முடியவில்லை
இதனை அடுத்து அவர் வறுமையில் வீட்டிலேயே முடங்கினார். கூலி வேலை செய்துவரும் இவரது மகன்கள் தான் இவரது மருத்துவ செலவு மற்றும் சாப்பாட்டிற்கு உதவி செய்துகொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ஒழுகும் ஒரு ஆஸ்பெட்டாஸ் வீட்டில் குடியிருக்கும் இவர், வாங்கிய விருதுகளை வைக்க கூட வீட்டில் இடம் இல்லாமல் உள்ளார். தற்போதைய கொரோனா ஊரடங்கு நேரத்தில் மகன்களுக்கும் வேலை, வருமானம் இல்லாததால் மருந்து மாத்திரைகள் வாங்க, சாப்பாட்டுக்கு பணம் இல்லாமல் இருக்கும் இவருக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன
இதுகுறித்து லட்சுமியம்மாள் கூறும்போது ’20 வயதில் பாட ஆரம்பிச்சேன். கும்பி பாட்டு, ஒப்பாரி பாட்டு, தாலாட்டுப் பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, பக்திப் பாட்டு, என எல்லாம் பாட்டும் நல்லாவே பாடுவேன். 50 வருஷமா ஆயிரக்கணக்கான கச்சேரிகளில் பாடிட்டேன். ஆரம்பத்துல உள்ளூர் திருவிழாக்கள்ல கும்பி பாட்டுப்பாட போவேன்.
அப்புறமா, பரவை முனியம்மாளுடன் பின்னணி பாட கூட போனேன். எங்க இணைக்கு சுற்றுப்பட்டிகள்ல நல்ல வரவேற்பு கிடைச்சது. வானொலி, கேசட்டில் பாடி அந்த ஆண்டவன் புண்ணியத்துல சினிமாவிலும் பாடிவிட்டேன். அதிலிருந்து கச்சேரி தொடர்ந்து கிடைத்தது. பெரிய வாய்ப்பு கிடைச்சதால, அதை தக்க வைக்க சாப்பிட கூட நேரமில்லாமல் அலைச்சலால் உடம்புக்கு முடியல. அதிகமாக கத்தி பாடினதுல ரத்தாகுழாயில் அடைப்பு வந்துட்டு. எவ்வளவோ செலவு பண்ணியும் குணமாகல. சாப்பாடு என் புள்ளைங்க போட்டுறுவாங்க. மருந்து மாத்திரை வாங்கவாது உதவித்தொகை கொடுத்தா நல்லாயிருக்கும்’ என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற கலையை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த பழம்பெரும் கலைஞர் லட்சுமியம்மாளுக்கு உடனே அரசு உதவி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது