2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌: ரஜினியின் நெருங்கிய நண்பர் அறிக்கை!

  • IndiaGlitz, [Friday,December 04 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் வருகையை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் மாற்று கட்சியில் உள்ள பிரபலங்கள் கூட ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ரஜினியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். மேலும் அதிமுக பிரபலமும், முன்னாள் சென்னை மேயருமான சைதை துரைசாமி ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டு வாழ்த்து கூறினார்

அந்த வகையில் தற்போது ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என்‌ பெருமதிப்புக்குரிய மூத்த அண்ணன்‌ திரு.சூப்பர்‌ ஸ்டார்‌ அவர்கள்‌ வரும்‌ ஜனவரி மாதம்‌ கட்சி துவங்கப்போவதாகவும்‌, இதற்கான அறிவிப்பை வரும்‌ டிசம்பர்‌ மாதம்‌ 31ம்‌ தேதி வெளியிடுவதாகவும்‌ இன்று அறிவித்து இருக்கிறார்‌. இது என்னைப்போன்ற அவரது நலம்‌ விரும்பிகள்‌, ரசிகர்கள்‌ மட்டுமின்றி தமிழக மக்கள்‌ அனைவரின்‌ மனதிலும்‌ மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

2017ம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌ 31ம்‌ தேதி அண்ணன்‌ திரு. ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ 'நான்‌ அரசியல்‌ கட்சி துவங்கப்போவது உறுதி என அறிவித்தார்‌. அன்று சொன்னதை இன்று செயல்‌ வடிவத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்‌. அவரது முடிவை நான்‌ வரவேற்கிறேன்‌. அண்ணனின்‌ தலைமையில்‌ 2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌ ஏற்படப்போவது உறுதி. அவருக்கு எனது பாராட்டுதல்களையும்‌, வாழ்த்துக்களையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

மேலும்‌ இந்த கொரோனா காலத்தில்‌ மருத்துவர்களின்‌ அறிவுரைகளையும்‌ மீறி தன்‌ உடல்‌ நலத்தையும்‌, உயிரையும்‌ பொருட்படுத்தாமல்‌ தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்கிட கட்சி துவக்கும்‌ முடிவை அண்ணன்‌ சுப்பர்‌ ஸ்டார்‌ அறிவித்தமைக்கு என்‌ மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்‌.