போனிகபூரை அடுத்து மேலும் ஒரு தயாரிப்பாளர் வீட்டில் புகுந்த கொரோனா!

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற தமிழ் படம் மற்றும் பல பாலிவுட் திரைப்படங்களை தயாரித்தவர் போனிகபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான இவருடைய வீட்டில் பணிபுரிந்த ஒருவருக்கு கடந்த வாரம் கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து போனி கபூர் மற்றும் அவரது இரண்டு மகள்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மும்பை சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் போனிகபூர் வீட்டில் பணிபுரிந்த மேலும் இருவருக்கு கொரோனா உறுதியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பாலிவுட்டின் மற்றொரு பிரபல தயாரிப்பாளரான கரன் ஜோஹர் வீட்டில் பணிபுரிந்த இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கரண்ஜோஹர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், அனைவருக்கும் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்த போதிலும் தானும் தன்னுடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதார ஊழியர்கள் அறிவுரை கூறியதாகவும், கரண்ஜோஹர் தனது சமூக வலை பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மகாராஷ்டிராவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் பண்புரிபவர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.