உருவாகிறதா 'கரகாட்டக்காரன் 2'? ராமராஜனுக்கு பதில் இந்த காமெடி ஹீரோவா?
- IndiaGlitz, [Sunday,March 26 2023]
ராமராஜன், கனகா நடிப்பில், கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவான ’கரகாட்டக்காரன்’ என்ற திரைப்படம் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான ’கரகாட்டக்காரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 34 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
’கரகாட்டக்காரன்’ இயக்குனர் கங்கை அமரனின் மகனும் இயக்குனருமான வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ராமராஜன் கேரக்டரில் மிர்ச்சி சிவா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ராமராஜன், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ’கரகாட்டக்காரன்’ திரைப்படத்திற்கு இளையராஜாவின் இசை மிகப்பெரிய பலமாக இருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல வெற்றி திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் தமிழ் திரை உலகில் உருவாகி வரும் நிலையில் ’கரகாட்டக்காரன்’ படத்தில் இரண்டாம் பாகமும் உருவாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.