எதற்கும் ஒரு எல்லையுண்டு… இந்திய அணியை வெளுத்து வாங்கிய கபில்தேவ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று கூறமுடியாது, ஆனால் ஐபிஎல் அணிக்கும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் இடையே ஒரு எல்லை இருந்திருக்க வேண்டும். மேலும் இந்தியாவிற்கு ஆடினால்தான் பெருமை என்று இந்திய வீரர்களையும் பிசிசிஐ-யின் சில முடிவுகளையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார் முன்னாள் கேப்டன் கபில்தேவ்.
டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரைஇறுதிக்கு முன்னேறாமல் இந்திய அணி வெளியேறியுள்ளது. இதையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுவும் லீக் போட்டிகளில் வெற்றிப்பெற்றிருக்க வேண்டிய பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இந்தியா படு மோசமாகத் தோற்றது.
இதற்கு ஓய்வே இல்லாமல் வீரர்கள் விளையாடி வருவதுதான் காரணம் என்று சிலர் விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றனர். இங்கிலாந்து தொடர், ஐபிஎல் அடுத்து டி20 உலகக்கோப்பை போட்டிகள் எனத் இந்திய அணி வீரர்கள் விளையாடிவரும் நிலையில் பயோ பபுள் முறையும் தொடருகிறது.
இதையடுத்து டி20 உலகக்கோப்பை தோல்வி குறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் கபில் தேவ், டி20 உலகக்கோப்பை முடிவுக்கு வந்தது என நினைத்து விடக்கூடாது. இந்திய அணியின் எதிர்காலத்தை முடிவுசெய்ய வேண்டிய நேரம் இது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பைக்கான திட்டத்தைப் போட வேண்டும்.
மேலும் ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் சிறிது இடைவெளி இருந்திருக்க வேண்டும். நமது நாட்டு வீரர்களுக்கு நிறைய அனுபவங்கள் உள்ளன. ஆனால் அவர்களால் அதனை சரியாக வெளிக்காட்ட முடியவில்லை. தேசத்திற்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடருக்கு வீரர்கள் முக்கியத்துவம் கொடுத்தால் நாம் என்ன சொல்ல முடியும். நாட்டிற்காக விளையாடினால்தான் பெருமை.
வீரர்களின் குடும்பச் சூழல் போன்ற விஷயங்கள் எனக்குத் தெரியாது. ஆனால் ஐபில் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே ஒரு எல்லை இருந்திருக்க வேண்டும். நான் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது எனக் கூறவில்லை. இதுபோன்ற விஷயங்களில் பிசிசிஐ தலையிட்டு தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது எனக் கூறியுள்ளார். கபில்தேவ்வின் இந்தக் கருத்தை தற்போது பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் ஆமோதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com