1200 கிமீ, 4 நாட்கள், தெலுங்கானா - கன்னியாகுமரி: பைக்கில் வந்த இஞ்சினியர்
- IndiaGlitz, [Tuesday,April 21 2020]
தெலங்கானா மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் நான்கு நாட்கள் பயணம் செய்து கன்னியாகுமாரி வந்த இன்ஜினியர் ஒருவர் குறித்த செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரல்வாய்மொழி என்ற பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்ற 24 வயது இளைஞர் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா மாநிலத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். கொரோனா வைரஸ் காரணமாக திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஜெயப்பிரகாஷ் தவித்தார். ஹோட்டல்களும் சரியாக இல்லாததால் பசி பட்டினியுடன் இருந்த ஜெயப்பிரகாஷ், தனது இருசக்கர வாகனத்திலேயே சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.
இதனை அடுத்து அவர் கலெக்டரிடம் அனுமதி பெற்று தனது இருசக்கர வாகனத்தில் 1200 கிலோமீட்டர் சொந்த ஊரை நோக்கி பயணம் செய்தார். நான்கு நாட்களிலும் அவர் வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் மற்றும் தண்ணீர் மட்டுமே அவருக்கு உணவாக இருந்துள்ளது. இந்த நிலையில் நான்கு நாட்கள் 1200கிமீ பயணம் செய்த அவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செக்போஸ்டில் போலீசார் சோதனை செய்தனர். பின்னர் அவருக்கு கொரோனோ பரிசோதனையும் செய்யப்பட்டது. அவருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது முடிவு செய்யப்பட்ட நிலையிலும் அவர் 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.
இந்த நிலையில் நான்கு நாட்கள் வெறும் பிஸ்கட்டை மட்டுமே சாப்பிட்டு 1,200 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்த ஜெயப்பிரகாஷ் பார்த்ததும் அவரது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.