பனை ஓலை தொட்டில்கள்.....! குமரி மக்கள் அதிகம் விரும்ப காரணம் என்ன....?
- IndiaGlitz, [Monday,August 30 2021]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பனை ஓலை தொட்டில்களை மக்கள் அதிகம் விரும்பி, பயன்படுத்திவருகிறார்கள். இந்த செய்திகள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நம் தமிழகத்தின் மரமாக பனைமரம் விளங்கி வருகிறது. பனைமரங்களின் ஒவ்வொரு பாகத்தையும் கன்னியாகுமரி மக்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறார்கள். குமரியில் உள்ள பால்மா மக்கள் அமைப்பு சார்பாக தயாரிக்கப்படும் பனை ஓலை தொட்டில்களுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த தொட்டிலின் பலன் என்னவெனில், குழந்தைகளை அதில் உறங்கவைக்கும் போது, எலும்பு தேய்தல், தசைப்பிடிப்பு, வாதப்பிரச்சனை, மனம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் உடல் சோர்வு போன்ற பல நோய்களை குணப்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. சந்தைகளில் மற்ற தொட்டில்கள் இருந்தாலும், இத்தகைய மருத்துவ பயன்பாடுகள் கொண்ட பனை தொட்டில்களை குமரி மக்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளின் ஆரோக்யத்தை கருத்தில் கொண்டு, இதை வாங்குவதால் பனை ஓலை தொட்டில் விற்பனை அங்கு அதிகரித்துள்ளது.