'கண்ணே கலைமானே' திரைவிமர்சனம் - கண்ணும் காதலும்
தரமான குடும்பத்துடன் பார்க்கும் வகையிலான கதைகளை படமாக்கி வரும் இயக்குனர் சீனுராமசாமி, முதல்முறையாக உதயநிதியுடன் இணைந்து 'கண்ணே கலைமானே' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.
விவசாயத்தில் பட்டப்படிப்பு படித்து இயற்கை விவசாயம், இயற்கை உரம் என தனது சொந்த ஊர் விவசாயிகளுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருபவர் கமலக்கண்ணன் (உதயநிதி). அந்த ஊருக்கு மதுரை கிராம வங்கி மேலாளராக வருகிறார் பாரதி (தமன்னா). தமிழ் சினிமாவின் வழக்கப்படி நாயகனும், நாயகியும் முதல் மோதல் பின் காதல், திருமணம், அழகான சந்தோஷமான வாழ்க்கை என்று கடந்து வரும்போது திடீரென தமன்னாவுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையால் குடும்பமே நொறுங்கி போகிறது. அந்த பிரச்சனை என்ன? பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை!
விவசாயியாக அறிமுகமாகி, ஊர் மக்களுக்கு இயற்கை உரம், இயற்கை விவசாயம் என விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவதில் இருந்து தமன்னாவிடம் காதலை நாகரீகமாக சொல்வது வரை உதயநிதியின் நடிப்பு ஓகே ரகம். முடிந்தளவு செயற்கைத்தனமான நடிப்பை தவிர்த்துள்ளார்.
இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வித்தியாச தோற்றம் மற்றும் அமைதியான, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் தமன்னா. வங்கி அதிகாரிகளிடமும் வாடிக்கையாளர்களிடம் கறாராக இருப்பது முதல் உதயநிதியின் காதலை உடனே ஏற்காமல் இரு குடும்பமும் ஒப்புக்கொண்டால் மட்டுமே திருமணம் என முதிர்ச்சியுடன் பேசுவது வரை அவருடைய நடிப்பில் மெச்சூரிட்டி தெரிகிறது. நிச்சயமாக தமன்னாவுக்கு இந்த படம் ஒரு மைல்கல் என்றே கூறலாம்.
வசுந்தராவுக்கு சிறிய கேரக்டர்தான் என்றாலும் கிராமத்து குறும்பு, கோபம் ஆகியவைகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமா இவரை இன்னும் அதிகம் பயன்படுத்தலாம்.
வடிவுக்கரசி வழக்கம்போல் கறாரான மற்றும் பாசமான கிராமத்து பாட்டி கேரக்டர். ஒருசில காட்சிகளில் முத்திரை பதிக்கின்றார். உதயநிதியின் தந்தை கேரக்டரில் நடித்திருக்கும் பூ ராமுவின் இயல்பான நடிப்பு சிறப்பு. மகனின் ஆசையை நிறைவேற்றுவதும், தனது தாயார் மாமியாராக மாறியதை கண்டிப்பதும் இவருக்கான சிறப்பான காட்சிகள்.
ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவில் பச்சை பசேலென்ற கிராமிய காட்சிகள் கண்களுக்கு இதம். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் அருமை. கிராமிய பாணி பின்னணி இசை சூப்பர்.
இயக்குனர் சீனுராமசாமி ஒரு தெளிவான நீரோடை போல் கதையை நகர்த்தி சென்றுள்ளார். முதல் பாதியில் ஊடல், காதல், இரண்டாம் பாதியில் திருமணம் அதன்பின் வரும் ஒருசில பிரச்சனைகள் என்று கதை ஒரே நேர்கோட்டில் செல்கிறது. பார்வையாளர்கள் நிமிர்ந்து உட்காரும் வகையில் ஒரு ஆச்சரியமான விஷயமோ, திருப்பங்களோ இல்லாமல் கதை நகர்வதால் இன்றைய இளைஞர்களை கவருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருசில காட்சிகள் ஏற்கனவே பல படங்களில் பார்த்தது போல் இருப்பது ஒரு குறையாக தெரிகிறது. மேலும் நீட் தேர்வு குறித்த காட்சிகள், விவசாயி தற்கொலை காட்சிகள் ஆகியவை வலிய திணித்தது போல் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் வேலைக்கு போகும் பெண்களை திமிர் பிடித்தவர்கள் என்று நினைக்கும் மனப்பான்மை மாற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட காட்சிகள் அருமை. கடைசி இருபது நிமிடங்கள் தமன்னாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையை விளக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் பெண்களை மட்டும் கவரலாம். கதைக்கு பொருத்தமான டைட்டில் வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் தமன்னாவின் வித்தியாசமான நடிப்பு மற்றும் யுவன்ஷங்கர் ராஜாவின் இசைக்காக இந்த படத்தை பார்க்கலாம்.
Comments