உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படத்திற்கு 3 சர்வதேச விருதுகள்… உற்சாகத்தில் படக்குழு

  • IndiaGlitz, [Monday,July 10 2023]

தமிழ் சினிமாவில் யதார்த்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல அழுத்தமான திரைப்படங்களை இயக்கிவரும் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற தமிழ் சினிமா ஒன்றிற்கு சமீபத்தில் 3 சர்வதேச விருதுகள் அறிவிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’, ‘மாமனிதன்’ போன்று அழுத்தமான பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவர் இயக்குநர் சீனுராமசாமி. அதிலும் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை திரைப்படம் தமிழில் பெரிய அளவிற்கு வெற்றிப்பெற்றது. இதையடுத்து உதயநிதி நடிப்பில் இவர் இயக்கிய ‘மாமனிதன்’ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்பெறா விட்டாலும் இன்றைகும் சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது.

இயக்குநர் சீனுராமசாமி தற்போது ‘இடிமுழக்கம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் உதயநிதி நடிப்பில் கடந்த 2019 இல் வெளியான திரைப்படம் ‘கண்ணே கலைமானே’. இந்தப் படத்தில் நடிகை தமன்னா, வடிவுக்கரசி, வசுந்தரா, பூ ராம், சரவணசக்தி ஆகியோர் நடித்திருந்தனர். விவசாயம் செய்துவரும் நடிகர் உதயநிதிக்கும் வங்கியில் மேலாளராக இருந்துவரும் நடிகை தமன்னாவிற்கும் இடையே நடைபெறும் காதல், பின்னர் கிராமத்து வாழ்க்கை, பொருளாதாரம் என அழுத்தமான தளத்தில் அமைந்திருக்கும் இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இந்தோ- பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விருது விழாவில் இப்படத்திற்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் நடிகை தமன்னாவிற்கு சிறந்த நடிகைக்கான விருதும், நடிகை வடிவுக்கரசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறந்த தயாரிப்பாளர் பிரிவிலும் விருதுகள் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட ‘கண்ணே கலைமானே’ திரைப்பட குழுவிற்கு ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.