கொரோனா வைரஸ் எதிரொலி: மகனுடன் செக்யூரிட்டரி வேலை செய்யும் பிரபல நடிகர்
- IndiaGlitz, [Thursday,July 16 2020]
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இருப்பதால் இந்திய திரையுலகின் படப்பிடிப்பு முடங்கியுள்ளது. இதனால் பெரிய நடிகர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றாலும் சிறிய நடிகர்கள், துணை நடிகர்கள் மற்றும் அன்றாடம் வருமானம் பெற்ற டெக்னீஷியன்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.
படப்பிடிப்பு இல்லாததால் பல நடிகர் நடிகைகள் வருமானம் இன்றி வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர் என்பதையும் குறிப்பாக மலையாள நடிகர் சுஜித் மீன் வியாபாரியாகவும், பாலிவுட் நடிகர் சோலங்கி திவாகர் என்பவர் டெல்லியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்பவராகவும், தமிழ் இயக்குனர் ஆனந்த் என்பவர் சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடை வைத்துள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
தற்போது பிரபல கன்னட நடிகர் ஒருவர் செக்யூரிட்டரி வேலை செய்து வருகிறார் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரபல கன்னட நடிகர் ஸ்ரீநாத் வசிஸ்தா என்பவர் திரைப்படங்கள் மட்டுமின்றி ஒருசில டிவி சீரியல்களில் நடித்துள்ளார். இவருக்கென்று கன்னட திரையுலகில் ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்த நிலையில் தனது அப்பார்ட்மென்ட்டில் பணிபுரியும் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளதால் அவருக்கு பதிலாக தானும் தன்னுடைய மகனும் செக்யூரிட்டரி வேலை செய்து வருவதாகவும், இந்த பணி தனக்கும் தன்னுடைய மகனுக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும் புகைப்படங்களுடன் தனது முகநூலில் நடிகர் ஸ்ரீநாத் வசிஸ்தா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இன்னும் சில மாதங்கள் நீடித்தால் இதேபோன்ற வித்தியாசமான அனுபவத்தை இன்னும் பலர் பார்க்க வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை