கமல்ஹாசன் எல்லாம் பதில் சொல்ல முடியாது: கனிமொழி எம்பி
- IndiaGlitz, [Thursday,October 03 2019]
சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக ‘கரை வேட்டி கட்டுபவர்கள் கறை படிந்தவர்கள்’ என்று அவர் பேசியது அரசியல்வாதிகளை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்த அரசியல்வாதிகள் கூறியதை பார்ப்போம்
அமைச்சர் ஜெயக்குமார்: கமல் ‘இன்ஸ்டன்ட் சாம்பார்’ மாதிரி. திடீரென கருத்து கூறுவார். திடீரென காணாமல் போய் விடுவார். தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விடுவார். அந்த நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு. அந்த வீடே அலிபாபா குகை போல் உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் பயந்து வெளியில் ஓடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தடை கோர முடியுமா? என்கிறீர்கள். திருடனாய் பார்த்துதான் திருந்த வேண்டும். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். மூலம் ஆள் மாறாட்டத்தை தொடங்கியவர் கமல். கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுவது தவறு.
கனிமொழி எம்பி: அரசியலில் திடீர் திடீரென வந்து புதிய கருத்துக்களைக் கூறும் அனைவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக இருக்கக் கூடிய பெருமை தமிழ்நாட்டிற்கு உள்ளதென்றால் அதற்கு தி.மு.க. என்னும் பேரியக்கமும், கரை வேட்டி கட்டிய கலைஞர் என்ற தமிழரும்தான் காரணம்தான். அதனை யாரும் மறுத்துவிட முடியாது. அரசியல் தெரிந்தவர்களுக்கு தான் கரை வேட்டியின் அருமை தெரியும்
அமைச்சர் பாஸ்கரன்: கமல்ஹாசன் எல்லாம் ஒரு அரசியல்வாதியா? அவரது பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டுமா? அவர் இன்று ஒன்று சொல்வார், நாளை ஒன்று பேசுவார். அவரது பேச்சை பெரிதாக எடுத்து கொள்ளக்கூடாது