மாரடைப்பால் தந்தை மரணம்: கனிமொழி எம்பி உதவியால் 1200 கிமீ பயணம் செய்த சென்னை ஐடி இளம்பெண்
- IndiaGlitz, [Wednesday,May 06 2020]
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி கொண்டிருக்கும் நிலையில் அவருடைய தந்தை மகாராஷ்டிர மாநிலத்தில் திடீரென காலமான நிலையில் தந்தையின் உடலை காண இளம் பெண்ணிற்கு கனிமொழி எம்பி உதவிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இரத்தினகிரி என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் யுவாந்தி என்பவர் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திடீரென அவரது தந்தை மாரடைப்பால் காலமானார். ஊரடங்கு காரணமாக தந்தையின் முகத்தை கடைசியாக காண முடியாத நிலை யுவாந்திக்கு ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா அவர்களிடம் உதவி கேட்டார். இது குறித்து தகவல் அறிந்த சுப்ரியா தொலைபேசி வாயிலாக திமுக எம்பி கனிமொழிக்கு தகவல் அளித்து யுவாந்தியை சென்னையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
இதனை அடுத்து களத்தில் இறங்கிய கனிமொழி எம்பி அவர்கள் யுவாந்தி பணிபுரியும் ஐடி நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு யுவாந்தியை மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கமாறு கேட்டுக் கொண்டார். நீண்ட தூர பயணம் என்பதால் யுவாந்தியுடன் யாராவது ஒருவர் செல்வதாக இருந்தால் அனுப்பி வைப்பதாக மென்பொருள் நிறுவனம் பதிலளித்தது.
இதனை அடுத்து திமுக மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்களை நியமனம் செய்த கனிமொழி எம்பி, அவர்கள் இருவருக்கும் யுவாந்தியை அவருடைய வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தார். இதனையடுத்து கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் யுவாந்தியும் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த இரு பெண்களும் மகாராஷ்டிராவுக்கு காரில் கிளம்பினார்கள். ஏப்ரல் 29ஆம் தேதி நள்ளிரவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று யுவாந்தியை அவருடைய இல்லத்தில் விட்டு விட்டு, மீண்டும் அங்கிருந்து கிளம்பி 30ஆம் தேதி இரவு சென்னை திரும்பினார்கள்.
மாரடைப்பால் இறந்த தந்தையின் முகத்தை கடைசியாக காண 1200 கிலோ மீட்டர் பயணம் செய்ய உதவிய கனிமொழி எம்பிக்கு யுவாந்தியும் அவரது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.