'கங்குவா' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சூர்யா ரசிகர்கள் உற்சாகம்..!

  • IndiaGlitz, [Saturday,August 10 2024]

சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ் உள்பட தொழில்நுட்ப பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் திரையரங்குகளில் 10 மொழிகளிலும் ஓடிடியில் 30 மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் சூர்யா இதுவரை இல்லாத அளவில் பத்துக்கு மேற்பட்ட கெட்டப்பில் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரித்திர காலம் மற்றும் நிகழ்காலம் என மாறி மாறி வரும் கதையம்சம் கொண்ட இந்த படம் சூர்யாவின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சுமார் 350 கோடி செலவில் உருவாகியுள்ளது.