கங்காருவை வீட்டில் வைத்து வளர்க்க முடியுமா? ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட புதுத் தகவல்!!!
- IndiaGlitz, [Saturday,December 19 2020]
வீட்டு விலங்குகளாக ஆடு, மாடு, எருமை, நாய், பூனை, கோழி போன்ற விலங்குகளை மட்டுமே வளர்க்கிறோம். ஆனால் காட்டில் வாழும் ஒரு அதிசய விலங்கான கங்காருவும் வீட்டில் வளர்க்கும் தன்மையுடன் இருப்பதாக சிட்னி பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அதாவது நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும் மனிதனுக்கும் ஒரு நெருங்கி தொடர்பு இருப்பதைப் போலவே கங்காருவுக்கும் மனிதனுக்கும் நல்ல தகவல் தொடர்புக்கான அறிகுறி இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்து உள்ளனர்.
கங்காரு எனும் விலங்கினம் ஆஸ்திரேலியாவில் மட்டும் வாழுகிறது. மேலும் இதில் இருக்கும் இன்னொரு அதிசயம் என்னவென்றால் மற்ற விலங்குகளைப்போல இல்லாமல் தனக்கு பிறக்கும் குட்டியை பல ஆண்டுகள் வரை தனது அரவணைப்பிலேயே வைத்து வளர்க்கிறது. இதற்கு பிறக்கும் குட்டியும் அளவில் மிகச்சிறியதாகவே இருக்கிறது. மேலும் கங்காருவின் வயிற்றில் இருக்கும் பை போன்ற உறுப்பில் வைத்து தனது குட்டியை எளிமையாகப் பாதுகாக்கவும் இதனால் முடிகிறது.
கங்காரு பொதுவாக தாவித் தாவித்தான் செல்லும். இதற்கு காரணம் அதன் பின்னங் கால்களைவிட முன்னங் கால்கள் வலிமை குன்றி காணப்படுகின்றன. இந்நிலையில் ரோரஹம்ப்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கங்காரு மனிதர்களுடன் எளிதில் பழகுமா என்பது குறித்த ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் கங்காரு தனக்கு உணவு கொண்டு வந்து வைக்கும் மனதர்களை ஏக்கமாக பார்ப்பதும், அவர்களின் உத்தரவுக்குக்காக காத்திருப்பதும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கங்காரு விலங்கிடம் நடத்தப்பட்ட பல்வேறு பரிசோதனைகள் அவை மனிதர்களிடம் தொடர்பில் இருப்பதை விரும்புகின்றன என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.