முதலில் முதல்வர்… அடுத்து மறைந்த பிரதமர்… பாலிவுட் நடிகையின் அசத்தும் புதிய அவதாரம்!
- IndiaGlitz, [Saturday,January 30 2021]
இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் முன்னதாக மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “தலைவி” படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இப்படத்திற்கான அனைத்துக் கட்ட படப்பிடிப்புகளும் முடிவுற்று தற்போது படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது.
இந்நிலையில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய டிவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டு உள்ளார். சாய் கபீர் என்பவர் கதை மற்றும் திரைக்கதையை எழுதி இயக்கவுள்ள இப்படம் இந்திய அளவில் பிரம்மாண்டப் படமாக எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் இப்படத்தில் இடம்பெற உள்ள சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் கதாபாத்திரத்தில் முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்பதையும் அவர் தெரிவித்து உள்ளார்.
அதோடு, இப்படத்தின் திரைக்கதை இறுதிக்கட்டதை எட்டி உள்ளதாகவும் இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு அல்ல. இது ஒரு சிறந்த காவியப் படம். துல்லியமாகச் சொல்வதானால் இது ஒரு அரசியல் நாடகம். தற்போதைய இந்தியாவின் சமூக-அரசியல் சூழலை புரிந்து கொள்ள இது எனது தலைமுறைக்கு உதவும் என்றும் கூறியுள்ளார். மேலும் “இந்திய அரசியல் வரலாற்றில் நாம் பெற்ற மிகச்சிறந்த தலைவியலாக இருந்த இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆவலுடன் உள்ளேன். பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள்” என்றும் நடிகை கங்கனா தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு நடிகை கங்கனா ரனாவத் இந்திய அளவில் கவனிக்கப்படும் மனிதராக உருவாகி விட்டார். மேலும் இவரது அரசியல் நிலைப்பாடு சமூக மட்டத்தில் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
This is a photoshoot about iconic women I did in the beginning of my career, little did I know one day I will get to play the iconic leader on screen. https://t.co/ankkaNevH2
— Kangana Ranaut (@KanganaTeam) January 29, 2021