முதல்வர் மகன் குறித்த விமர்சனம்: பிரபல நடிகையின் வீட்டில் நடந்த துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
- IndiaGlitz, [Sunday,August 02 2020]
முதலமைச்சரையும் முதலமைச்சர் மகனையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஜெயம் ரவி நடித்த ’தாம் தூம்’ என்ற திரைப்படத்தில் தமிழில் நடித்த நடிகை கங்கனா ரனாவத், தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து இவர் தனது கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகிறார். குறிப்பாக நெப்போடிஸம் குறித்த இவரது கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் கரண்ஜோஹர் உள்ளிட்ட பிரபலங்களை அவர் நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநில முதல்வர் மற்றும் அவரது மகன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்தால் அவர் பயமுறுத்தப்படலாம் என்று அவரது தரப்பினர் கூறியதாகவும் இதனையடுத்து அவர் தற்போது மணாலியில் உள்ள தனது வீட்டில் இருந்து வருவதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் திடீரென நேற்று இரவு கங்கனாவின் மணாலி வீட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதாகவும், இது தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டலாக தான் கருதுவதாகவும் கங்கனா கூறியுள்ளார். இரவு 11.30 மணிக்கு திடீரென தனது வீட்டில் வீட்டில் இரண்டு முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், 8 வினாடிகள் இடைவெளியில் இந்த துப்பாக்கி சூடு நடந்தது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து செக்யூரிட்டியை சென்று பார்க்குமாறு கூறியபோது யாரும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்
மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் முதல்வர் மகன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால்தான் என்னை பயமுறுத்துகின்றனர் என்றும், ஆனால் இதற்கெல்லாம் தான் பயப்பட போவதில்லை என்றும் தொடர்ந்து தனது கருத்துக்களை தெரிவிக்க இருப்பதாகவும் கூறினார். மேலும் ’நான் ஒருவேளை என்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு இறந்தால் அது தற்கொலை அல்ல என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்’ என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது