ஆன்லைனில் பாடம் படித்து அறுவடை செய்த நபருக்கு சிறைத்தண்டனை

  • IndiaGlitz, [Tuesday,January 03 2017]

இன்றைய டெக்னாலஜி உலகில் பெரிய பெரிய படிப்புகளையும் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் படிக்கும் வசதி வந்துவிட்டது. இந்நிலையில் ஆன்லைனில் பாடம் படித்து அதன்படி நடந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைதுள்ளனர். அப்படி என்ன பாடம் படித்தார் அவர்? அவர் படித்த பாடம் 'கஞ்சா வளர்ப்பது எப்படி? என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்தை சேர்ந்த சையது ஹூசைன் என்பவர் ஆன்லைனில் கஞ்சா வளர்ப்பது எப்படி என்று கற்றுக்கொண்டதுடன், அதை நடைமுறை படுத்த தனது வீட்டிலேயே கஞ்சா வளர்த்துள்ளார்.
சூரிய ஒளிக்கு பதிலாக வீட்டில் வளர்த்த கஞ்சா செடிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் மூலம் வெப்பத்தை அளித்து அந்த வெப்பத்தை டேபிள் பேன் மூலமாக சமப்படுத்தியுள்ளார். மேலும் பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உரங்களையும் கஞ்சா செடிகளுக்கு இட்டுள்ளார்.
இந்நிலையில் ஆன்லைனில் படித்து வெற்றிகரமாக கஞ்சா பயிரை அறுவடை செய்த ஹூசைன் அதை விற்பனை செய்யும்போது காவல்துறையினர்களிடம் வசமாக சிக்கி கொண்டார். தற்போது அவர் பயிரிட்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டதோடு பயிர் செய்த நபர் சிறைக்கம்பிகளை எண்ணுகிறார்.