விராட் கோலி நெஞ்சில் சாய்ந்த வில்லியம்சன்… இறுதிப்போட்டி குறித்து மனம் திறந்த பேட்டி!
- IndiaGlitz, [Friday,July 02 2021] Sports News
சவுதாம்படனில் நடைபெற்ற உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியை நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தனது பவுண்டரியோடு அசத்தலாக முடித்து வைத்தார். அந்த பவுண்டரியை அடுத்து ஒட்டுமொத்த நியூசிலாந்து வீரர்களும் காலரியில் அமர்ந்து ஆரவாரம் செய்தனர். ஆனால் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் எதிர் அணியான இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் நெஞ்சில் போய் பக்குவமாகப் படுத்துக் கொண்டார்.
இந்தக் காட்சிகளைப் பார்த்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். வில்லியம்சன் மிகவும் மென்மையான மனிதர் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களும் அதைக் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் இந்நிகழ்வு குறித்து மனம் திறந்த வில்லியம்சன் தற்போது, நான் ராஸ் டெய்லருடன் வெற்றியைக் கொண்டாடாமல் விராட் கோலியின் நெஞ்சில் சாய்ந்து கொண்டது குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள்.
அவர் எதிர்அணி கேப்டன் என்பதைத்தவிர எனக்கும் விராட் கோலிக்குமான உறவு பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஏற்பட்டது. கிரிக்கெட்டையும் கடந்து ஒரு ஆழமான நட்பு எங்களுக்குள் இருக்கிறது அது இருவருக்குமே தெரியும் என நெகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இந்திய கிரிக்கெட் அணியோடு உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சந்தித்தோம். அதில் வெற்றிப்பெற்ற அந்தத் தருணம் மிகச் சிறந்தது. இந்தியாவுடன் எப்போது கிரிக்கெட் விளையாடினாலும் அது மிகவும் கடினமானதாக இருக்கும். நெருக்கடி அதிகமாக இருக்கும். அதனால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ராஸ் டெய்லருடன் கொண்டாடாமல் நான் விராட் கோலியுடன் கொண்டாடினேன் என மகிழ்ச்சிப் பொங்க தெரிவித்து உள்ளார்.
மேலும் கடந்த 2008 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருககான உலகக் கோப்பை தொடரில் கோலியும் வில்லியம்சனும் எதிர் எதிர் அணியில் விளையாடி உள்ளனர். அதோடு அந்தத் தொடரின் செமிஃபைனல் போட்டியில் விராட் கோலிதான் வில்லியம்சை அவுட்டாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பல வருடங்களாகவே விராட் கோலிக்கும் வில்லியம்சனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்ததை அவர் தற்போது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.