Kanaa Review
சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு, அருண்ராஜா காமராஜரின் முதல் இயக்கம், முதல் பெண்கள் கிரிக்கெட் குறித்து பேசும் படம் என பல முதல்களை கொண்ட இந்த 'கனா' திரைப்படம் தரத்திலும் முதலிடம் பிடித்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்
விவசாயத்தை தொழிலாக கொண்ட சத்யராஜ், என்ன விலை கொடுத்தாலும் தனது நிலத்தை விற்க மாட்டேன் என்ற கொள்கை உடையவர். அதே நேரத்தில் கிரிக்கெட் பைத்தியம். இந்தியா தோற்றுவிட்டது என்றால் கதறி அழுபவர். அவருடைய அழுகையை சிரிப்பாக மாற்றவே கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற கனவு அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு சிறுவயதிலேயே வந்துவிடுகிறது. அந்த கனவு பலித்ததா? சத்யராஜின் முகத்தில் புன்னகை தோன்றியதா? என்பதுதான் இந்த படத்தின் கதை
உண்மையான கிரிக்கெட் வீராங்கனையை நடிக்க வைத்திருந்தால் கூட இந்த அளவுக்கு கச்சிதமாக நடித்திருக்க முடியுமா? என்று தெரியவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் அத்தனை மெருகு. கிரிக்கெட் வீராங்கனை என்ற கேரக்டராகவே வாழ்ந்துள்ளார் என்றே கூற வேண்டும். குறிப்பாக அவர் வீசும் ஒவ்வொரும் பந்தும் கொஞ்சம் பிசகியிருந்தாலும் காமெடியாக மாறியிருக்கும். மிகவும் நேர்த்தியாக டூப் இன்றி கடினமான பயிற்சிகள் செய்து கேரக்டரை தூக்கி பிடித்துள்ளார். வாழ்த்துக்கள்
சத்யராஜுக்கு சாதாரண கேரக்டர் கொடுத்தாலே பின்னி பிடலெடுத்துவிடுவார். விவசாயி கேரக்டர் கொடுத்தால் சும்மா விடுவாரா? அவர் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் ஒரு விவசாயியின் குரல் உள்ளது. அதேபோல் மகளிடம் அவர் காட்டும் பாசம், மகளுக்காக அவர் செய்யும் தியாகம், மகளின் வெற்றி தோல்விகளை பார்க்கும்போது முகத்தில் காட்டும் உணர்ச்சி என்று அவரது நடிப்பை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
'நட்புக்காக' என்று சிவகார்த்திகேயன் பெயர் டைட்டில் போடப்பட்டிருந்தாலும் இரண்டாம் பாதி படத்தை அவர்தான் தூக்கி நிறுத்துகிறார். முதலில் வீராங்கனைகள் அவரை அவமானப்படுத்தும்போது பொறுமையாக இருப்பதும், அதன்பின் வெற்றிக்கு அவர் தரும் டிப்ஸ்களும், வீராங்கனைகள் தேர்வின்போது அவருடைய வாதமும், ஐஸ்வர்யாவின் திறமையை வெளியே கொண்டு வர அவர் எடுக்கும் முயற்சியும் அபாரம்.
தர்ஷன் இந்த படத்தின் ஹீரோ என்று படக்குழுவினர் கூறிக்கொண்டாலும், அவரது கேரக்டருக்கு பெரிய ஸ்கோப் இல்லை. இளவரசு, ரமா, முனிஷ்காந்த் ஆகியோர்களுக்கு அருமையான நடிப்பு.
அறிமுக இசையமைப்பாளர் திபு நிபுணன் தாமன்ஸ் இசையில் அனைத்து பாடல்களும் இனிமை. 'வாயாடி பெத்த புள்ள' பாடல் படமாக்கப்பட்ட விதம் சூப்பர். அதேபோல் பின்னணி இசையில் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் கிரிக்கெட் போட்டியின்போது பின்னணி இசை மிக அருமை. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு மற்றும் ரூபன் படத்தொகுப்பு கச்சிதம்
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் முதல் படத்திலேயே சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி தனது டீமின் அனைத்து ஆட்டக்காரர்களையும் சென்சுரி அடிக்க வைத்து, கோப்பையை சிவகார்த்திகேயனிடம் சமர்ப்பித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இந்த படத்தில் பாதிக்கும் மேல் கிரிக்கெட் காட்சிகள் இருந்தாலும் இயக்குனர் சொல்ல வந்த கருத்து 'விவசாயம்'. அதை மிக அருமையாக ஆரம்பத்தில் இருந்தே ஒருசில காட்சிகள் மூலம் பேலன்ஸ் செய்து கிளைமாக்ஸில் அழுத்தமாக கூறிவிட்டார். படம் முடிந்து வெளியே வரும்போது இந்த படம் ஒரு கிரிக்கெட் படம் அல்ல, விவசாய படம் என்பதே அனைவர் மனதிலும் நிற்கும் ஒரு ஆச்சரியம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஒரு வசனம் உண்டு. 'எது சொல்றதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு சொல்லு' என்று. அதேபோல் கிளைமாக்ஸ் வரை ஜெயித்துவிட்டு அதன் பின்னர் இயக்குனர் தான் சொல்ல வந்த விஷயத்தை கூறியிருப்பது மிகப்பொருத்தம்
ஒரு பக்கம் விவசாயிகள் தற்கொலை, விவசாய நிலத்தை வாங்க ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் கழுகுப்பார்வையில் இருப்பது, விவசாயிகளை வங்கி அதிகாரிகள் கேவலமாய் பேசுவது போன்ற காட்சிகளும் இன்னொரு பக்கம் கிராமத்தில் இருந்த வந்த விளையாட்டு வீரரை எளக்காரமாய் பார்ப்பது, கிரிக்கெட்டில் உள்ள அரசியல், வீரர்களுக்குள் இருக்கும் போட்டி, பொறாமைகளை என மிக இயல்பாக காட்சிகளாக வைத்து படம் முழுவதும் ஆடியன்ஸ்களை கட்டி வைத்திருக்கும் வித்தையை சரியாக கடைபிடித்துள்ளார் இயக்குனர்.
அதேபோல் அரையிறுதி போட்டிக்கு முன்பு வரை ஐஸ்வர்யாவை டீமில் சேர்க்காமல் இருந்தது, அதற்கு கோச் கூறும் காரணம், எதிரணி வீராங்கனைகளுக்கு புரியாத மொழியில் பேசி அவர்களை குழப்புவது, ஹீரோயினால்தான் டீம் வெற்றி பெற்றது என்று வழக்கம்போல் காண்பிக்காமல் வித்தியாசமாக பெறும் வெற்றி என ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் செதுக்கியுள்ளார் என்றே கூற வேண்டும்.
மொத்தத்தில் இந்த படத்தால் இளம்பெண்கள் பலருக்கு கிரிக்கெட் விளையாட்டு கனவு ஏற்படுவது நிச்சயம் என்பதும் விவசாயிகள் மீது அனைவருக்கும் ஒரு மரியாதை தோன்றும் என்பதும் நிச்சயம்
- Read in English