பொங்கலுக்கு அரசு தரும் விலைமதிப்பில்லா பரிசு: பஸ் ஸ்டிரைக் குறித்து கமல்
- IndiaGlitz, [Friday,January 05 2018]
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய போக்குவரத்து ஊழியர்களிடம் நேற்று தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நேற்று மாலை முதல் அறிவிக்கப்படாத திடீர் வேலைநிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வரும் கமல்ஹாசன், போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனை குறித்து, தனது வேண்டுகோளாக டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும்' என்று கமல் கூறியுள்ளார். வழக்கமாக புரியாத வார்த்தைகளில் டுவீட் பதிவு செய்யும் கமல், இந்த டுவீட்டை எளிய தமிழில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.