10 வருட இடைவெளி ஏன்? கமாலினி முகர்ஜி விளக்கம்
- IndiaGlitz, [Wednesday,May 18 2016]
உலக நாயகன் கமல்ஹாசனுடன் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'வேட்டையாடு விளையாடு' படத்தில் நடித்த நடிகை கமாலினி முகர்ஜி சரியாக 10 வருடங்களுக்கு பின்னர் நடித்த தமிழ்ப்படம் இறைவி. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக கமாலினி முகர்ஜி நடித்துள்ளார்.
ஏன் இந்த பெரிய இடைவெளி என்பதற்கான காரணத்தை கமாலினி முகர்ஜி கூறியபோது, 'வேட்டையாடு விளையாடு' படத்திற்கு பின்னர் தன்னை தேடி வந்த கேரக்டர் எதுவும் தன்னை கவரவில்லை என்றும் மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி ஆகும்போது ஒரு பவர்புல் கேரக்டரில் நடிக்கவேண்டும் என்று தான் விரும்பியதாகவும் கூறினார்.
தன்னை முதன்முதலில் கார்த்திக் சுப்புராஜ் சந்தித்து கதையையும் தன்னுடைய கேரக்டரையும் விளக்கியபோது இந்த புரொஜக்ட்டில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகவும், இந்த படத்தில் நடித்த முடித்த பின்னர் ஒரு ஆத்மார்த்தமான திருப்தி ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள கமாலினி, அவரே ஒரு இயக்குனர் என்பதால் இயக்குனர் எதிர்பார்ப்பதை எந்தவித தடையும் இல்லாமல் வெளிப்படுத்தும் ஒரு கலைஞராக தான் சூர்யாவை பார்த்ததாகவும், அவர் மட்டுமின்றி இந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதி மற்றும் பாபிசிம்ஹா ஆகியோர்களும் திறமையான கலைஞர்கள் என்பதை தான் புரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இதுமாதிரி ஒரு வெயிட்டான கேரக்டரில் நடிப்பதற்காகவே இத்தனை வருடம் காத்திருந்ததாகவும், இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் நிச்சயம் பேசப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.