என்னையும் ரஜினியையும் அரசியல் நிச்சயம் பிரிக்கும்: கமல்
- IndiaGlitz, [Saturday,March 17 2018]
திரையுலகில் நண்பர்களாக இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியல் களத்தில் ஒரே நேரத்தில் இறங்கியிருந்தாலும் இருவரும் வெவ்வெறு பாதைகளில் பயணம் செய்கின்றனர். ரஜினி ஆன்மீக அரசியலும் கமலின் பகுத்தறிவு மற்றும் திராவிட அரசியலும் முற்றிலும் நேரெதிர் பாதையில் செல்லும் வகையில் உள்ளது.
இந்த நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், அரசியல் வருகை காரணமாக ரஜினிக்கும் எனக்கும் இடையே இனி வரும் காலங்களில் நிச்சயமாக பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், எங்கள் இருவரின் திரைப்படங்களின் பாணியே முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் நிலையில் அரசியலும் அதேபோல் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதே கருத்தை கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் கட்சி ஆரம்பிக்கும் முன் ரஜினியை சந்தித்தபோது செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது: சினிமாவிலேயே என்னுடைய பாணி வேறு, கமல்ஹாசனின் பாணி வேறு. அதேபோல் தான் அரசியலிலும் இருக்கும். இருந்தாலும் இருவருக்கும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது' என்று கூறியிருந்தார்.
எனவே இருவரின் கூற்றுக்களை பார்க்கும்போது இதுவரை சினிமாவில் போட்டியாக இருந்த கமல், ரஜினி, இனிமேல் அரசியலில் போட்டியாளர்களாக இருப்பார்கள் என புரிந்து கொள்ள முடிகிறது.