கமலுடன் நடித்தால்தான் ஒரு நடிகர் முழுமை அடைவார். ஆனந்த் மகாதேவன்

  • IndiaGlitz, [Thursday,July 09 2015]

கடந்த வெள்ளியன்று ரிலீஸாகி உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள 'பாபநாசம்' திரைப்படத்தில் கமல், கவுதமி, ஆஷா சரத் ஆகியோர்களுக்கு அடுத்து முக்கிய வேடத்தில் நடித்தவர் ஆனந்த் மகாதேவன். ஆஷா சரத்தின் கணவராக நடித்திருந்த இவர், கிளைமாக்ஸில் தனது மகன் உயிருடன் இருக்கின்றானா? அவன் என்றைக்கு ஒருநாள் வருவான் என எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கலாமா? என கமலிடம் உருகி பேசும் அந்த நீண்ட வசனம் அனைவரையும் ஆச்சாரியப்படுத்தியது என்றே சொல்லலாம்.

பாலிவுட்டில் பிசியான நடிகர், மற்றும் இயக்குனராக இருக்கும் ஆனந்த் மகாதேவனை, கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் 2' படத்திலேயே நடிக்க வைத்துள்ளார். மேலும் உத்தம வில்லன்' படத்திலும் ஒரு கேரக்டரில் நடிக்க அழைத்தார். ஆனால் மகாதேவன் அந்த நேரத்தில் இந்தியில் பிசியாக இருந்ததால், அந்த கேரக்டரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

தமிழில் தன்னை அறிமுகப்படுத்திய கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய ஆனந்த் மகாதேவன், 'கமலுடன் இணைந்து ஒருவர் நடித்துவிட்டால், பின்னர் வேறு எந்த நடிகருடனும் மிக எளிதாக நடித்துவிடலாம்' என்றும், கமலுடன் நடித்தால்தான் ஒரு நடிகர் முழுமை அடைவார் என்றும் கூறியுள்ளார்.

'பாபநாசம்' படத்தில் தனக்கு சின்ன கேரக்டர்தான் எனினும், மக்கள் விரும்பும் வகையான கேரக்டர் என்பதாலும், குறிப்பாக கிளைமாக்ஸில் கமலுக்கு இணையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

தற்போது பாலிவுட்டில் இரண்டு படங்களை இயக்கி கொண்டு இருப்பதாகவும், அவை இரண்டுமே இவ்வருட இறுதிக்குள் ரிலீஸாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.