அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறார் கமலா ஹாரிஸ்..!
- IndiaGlitz, [Wednesday,December 04 2019]
அமெரிக்க அதிபர் பதவி தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளி செனட் சபை உறுப்பினரான கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளராகத் தற்போதையை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் களமிறங்குகிறார். இவரை, எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் உட்பட 17 பேர் களத்தில் இருந்தனர். இதற்கிடையே, பெரும் கோடீஸ்வரரும் நியூயார்க் நகர முன்னாள் மேயருமான மைக்கேல் ப்ளூம்பெர்க்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
அமெரிக்காவின் மற்றொரு பெரும் பணக்காரரான டாம் ஸ்டேயரும் அதிபர் தேர்தலில் குதித்துள்ளார். இதனால், அமெரிக்க அதிபர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ், அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 'நான் பில்லியனர் இல்லை என்பதால் போட்டியிலிருந்து விலகுகிறேன்' என்று கமலா ஹாரீஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வேட்பாளராக வேண்டுமென்றால், முதலில் கட்சிக்குள் ஆதரவு கிடைக்க வேண்டும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். இதற்காக, பிரசாரம் செய்யவும் பெரும் தொகை வேண்டும். அமெரிக்க அதிபர் தேர்தலில் டி.வி விவாதங்கள், விளம்பரங்கள் அதிக முக்கியத்துவம் வகிக்கும். விளம்பரங்களுக்குச் செலவழிக்கவும் அதிக பணம் தேவை. தங்கள் பிரசாரத்துக்காக மக்களிடமிருந்து வேட்பாளர்கள் நன்கொடை பெறலாம்.
அமெரிக்க அதிபர் பதவிக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட கமலா ஹாரீஸும் களத்தில் இருந்தார்.இந்நிலையில்,தன்னுடைய ட்விட்டர் தளத்தில் தமது ஆதரவாளர்களுக்கு கமலா ஹாரீஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், போட்டியிலிருந்து விலகுவதாகவும், பிரசாரத்தை நிறுத்திக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்துக்கான நிதியை திரட்ட முடியாதது, பிரச்சாரத்தில் பின்தங்கியதே கமலா ஹாரீஸின் இந்த முடிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.