பாதசாரிகளின் உயிரை மதியாத பல்லக்கு அரசு கவிழும்: கமல் கண்டனம்
- IndiaGlitz, [Monday,November 27 2017]
கோவை அவினாசியில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்ட பேனரில் மோதிய ரகு என்ற இளைஞர் மரணம் அடைந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டும், அந்த உத்தரவை அரசு விழா ஒன்றிலேயே மீறுவது நீதிமன்றத்தின் அவமதிப்பாக ஒருபுறம் இருந்தாலும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஆளும் கட்சியே பின்பற்றாவிட்டால் மற்ற கட்சிகள் எப்படி பின்பற்றும் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ரகுவின் அகால மரணத்திற்கு வைகோ, திருமாவளவன் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் சற்றுமுன்னர் உலக நாயகன் கமல்ஹாசனும் இதுகுறித்து தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். கமல் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Bannerஜிக்கள் உணரவேண்டும்
இனியாவது இதுபோன்ற தவறுகளால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.