சிபிஐக்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள்: முதல்வருக்கு கமல்ஹாசன் கோரிக்கை

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து கிட்டத்தட்ட அனைத்து கோலிவுட் திரையுலக பிரமுகர்களும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்த முதல் நாளிலிருந்தே தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது ஆவேசமான கருத்துக்களை உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தெரிவித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளதாவது:

சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி என தெரிவித்துள்ளார்.