தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகத்திற்கு நன்றி கூறிய கமல்
- IndiaGlitz, [Friday,June 15 2018]
நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த வாரம் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரை சந்தித்து காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடும் என்று தான் நம்புவதாக கமல் கூறியிருந்தார்
இந்த நிலையில் நேற்று முதல் கபிணி அணையில் இருந்து கர்நாடக மாநில அரசு தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு கமல்ஹாசன் கர்நாடக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் காவிரி மேலாண்மை ஆணையம் செயலுக்கு வரும் வரை இரு மாநில அரசுகளின் புரிதல் தன்மை மேலும் பலவிதங்களிலும் நன்மை அளிக்கும் என்று கூறியுள்ளார்.
ஆனால் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் வேகமாக கபிணி அணை நிறைந்துவிட்டதாகவும், இதற்கு மேல் தண்ணீரை தேக்கினால் அணைக்கு ஆபத்து என்ற காரணத்தால் உபரி நீரை கர்நாடக மாநிலம் திறந்துவிட்டுள்ளதாகவும் நெட்டிசன்கள் கமல் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் கர்நாடக அரசு திறந்துவிட்ட தண்ணீரால் தற்போதைக்கு விவசாயிகளின் பிரச்சனை தீர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.