தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன்: கமல் இரங்கல் அறிக்கை
- IndiaGlitz, [Thursday,June 03 2021]
உலகநாயகன் கமலஹாசன் நடித்த ஒரு சில திரைப்படங்கள் உள்பட பல திரைப்படங்களை இயக்கிய ஜிஎன் ரங்கராஜன் அவர்கள் இன்று காலை காலமானார் என்ற செய்தி திரையுலகினரை உலுக்கிய நிலையில் ஜி என் ரங்கராஜன் மறைவு குறித்து கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
இயக்குனர் ஜி.என்.ரங்கராஜனுக்கு அஞ்சலி!
நான் சினிமாவில் நுழைந்த காலம் தொட்டு இறக்கும் தறுவாய் வரை என் மீது மாறாத பிரியம் கொண்டவர் இயக்குனர் ஜி.என். ரங்கராஜன். கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கி கொண்டவர். இன்றும் விரும்பிப் பார்க்கப்படும் பல திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்குத் தந்தார். அவரது நீட்சியாக மகன் ஜி.என்.ஆர். குமரவேலனும் சினிமாவில் தொடர்கிறார்.
கல்யாணராமன், மீண்டும் கோலா, கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம், மகாராசன் என என்னை வைத்து பல வெற்றிப் படங்களைத் தந்தவர். என் மீது கொண்ட மாறாத அன்பால், தான் கட்டிய வீட்டிற்கு 'கமல் இல்லம் என்று பெயர் வைத்தார். இன்று அந்த வீட்டிற்கு சற்றேறக்குறைய 30 வயதாவது இருக்கக் கூடும்.
ஜி.என்.ஆர் தன் வீட்டில் இல்லையென்றால் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில்தான் இருப்பார் என்றே எங்களை அறிந்தவர்கள் சொல்வார்கள். சினிமாவில் மட்டுமல்ல, மக்கள் பணியிலும் என்னை வாழ்த்தியவர். எப்போதும் எங்கும் என் தரப்பாகவே இருந்தவர். சில நாட்களுக்கு முன்பு கூட முகச்சவரம் செய்து பொலிவோடு இருக்க வேண்டும். கமல் பார்த்தால் திட்டுவார் என்று சொல்லி வந்தார் என கேள்வியுற்றேன். தான் ஆரோக்கியமாக இருப்பதையே நான் விரும்புவேன் என்பதை அறிந்தவர்.
நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன். அண்ணி ஜக்குபாய்க்கும், தம்பி இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலனுக்கும் குடும்பத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கமல் தனது இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.
நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன். இயக்குனர் ஜி.என்.ரங்கராஜனுக்கு அஞ்சலி. pic.twitter.com/OmTzQqpdL5
— Kamal Haasan (@ikamalhaasan) June 3, 2021